தேடுதல்

இளவயதில் திருத்தந்தை பிரான்சிஸ் இளவயதில் திருத்தந்தை பிரான்சிஸ் 

குருத்துவ வாழ்விற்கான அழைப்பு பெற்றதன் 70ஆம் ஆண்டு

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு பெற இறைவனை நோக்கிச் செல்லும் போது, இறைவன் நமக்காகக் காத்திருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

1953ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் ஜார்ஜோ பெர்கோலியோ என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 17ஆவது வயதில் குருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்டு துறவறத்தில் இணைந்த நாளின் 70 ஆம் ஆண்டை இன்று சிறப்பிக்கின்றார்.

செப்டம்பர் 21 வியாழன் அன்று திருஅவை நற்செய்தியாளரான புனித மத்தேயு திருவிழாவை சிறப்பிக்கும் நாளில், தான் அழைத்தல் வாழ்விற்குள் நுழைந்த 70ஆம் ஆண்டினை  நினைவுகூர்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது 17 வயதில் புனித மத்தேயு திருவிழா திருப்பலிக்கு முன்பாக ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின்னரே இறை இரக்கத்தின் ஆற்றலால் தனது வாழ்வை இறையழைத்தலுக்காக அர்ப்பணித்தார் என்று பலமுறை கூறியுள்ளார்.      

தனது அழைத்தல் வாழ்வினைப் பற்றி எடுத்துரைக்கையில், ஒப்புரவு அருளடையாளம் பெற வேண்டும் என்று அந்த நாளில் தனக்கு ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டதாகவும், தனக்காக யாரோ ஒருவார் காத்திருக்கின்றார் என்று உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளம் பெற்றதற்குப் பிறகே தான் ஒரு குருவாக மாற வேண்டும் என்ற அழைத்தலைப் பெற்றதாகவும், பாவியான மத்தேயு இயேசுவின் பார்வையில் பட்டு மனமாற்றமடைந்ததைப் போல நாமும் மனமாற்றம் பெற்றவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். (பெந்தெகொஸ்து நாள் மே 18. 2013)

மேலும் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு பெற இறைவனை நோக்கிச் செல்லும் போது, இறைவன் நமக்காக காத்திருக்கின்றார் என்றும் நமது பாவங்களை மன்னித்து புது வாழ்வளிக்க நமக்கு உதவுகின்றார், நமக்காகக் காத்திருக்கும் இறைவனைக் கண்டுபிடிப்பது மிகச்சிறப்பான செயல் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2023, 11:18