புலம்பெயர்ந்தோர் பணி ஊக்குவிக்கப்பட வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 6.15 மணிக்கு வெலோட் ரோம் விளையாட்டரங்கத்தில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 28.4 கிமீ தூரம் காரில் பயணித்து மாலை 6.45 மணிக்கு மர்சேய்ல் பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் குடியரசுத்தலைவர், எம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருத்தந்தையை வரவேற்று Hélène Boucher என்னும் விருந்தினர் அறையில் சிறிது நேரம் உரையாடினர். அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அதிகாரப்பூர்வ பிரியாவிடையானது அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் வழங்கப்பட்டது. அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறி விமானத்தில் ஏறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர் நோக்கிப் பயணமானார்
தனது இந்த பயணத்தின் போது இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா மற்றும் பிரான்ஸ் குடியரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் ஆகியோருக்கு நன்றி கூறி தந்திச்செய்தியினையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விமானத்தில் தன்னோடு பயணித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘‘நன்கு முறைப்படுத்தப்பட்ட வகையில் நடத்தப்படும் இடப்பெயர்வுகள் வளமையானது, கருணைக்கொலைகள் மனித வாழ்க்கையை அழிக்கும் கருத்தியல் காலனித்துவங்கள் போன்றது‘‘ என்பன போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார்.
திருப்பீடசெய்தித்தொடர்பு இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் கேள்விகளை துவக்கி வைக்க பணி நிறைவு பெறும் Roberto Bellino, பிறந்த நாள் கொண்டாடும் Rino (Anastasio) ஆகியோருக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லாம்பதுசா புலம்பெயர்ந்தோர் வாழ்வு, கருணைக்கொலைகள், உக்ரைன் மக்களின் துயரம், ஆயுதக் கலாச்சாரம், மனித கடத்தல் என்பன போன்ற பல கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் உடன் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்