அமைதியின் சுவரை உருவாக்குவோம்
ஜான் போஸ்கோ – வத்திக்கான்
மர்சேய்ல் திருத்தூதுப்பயணத்தின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சமய தலைவர்களுக்கு கடல் விபத்தில் இறந்த மாலுமிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான நினைவகத்தில் வழங்கிய உரை.
அன்பு சகோதர சகோதரிகளே!
நமக்கு முன்பாக வாழ்வின் ஆதாரமான கடல் உள்ளது, இருப்பினும் இந்த இடம் இறப்பை உண்டாக்கும் கப்பல் விபத்துக்களின் சோகத்தையும் நினைவுபடுத்துகின்றது. இவ்விபத்துகளில் சிக்கி உயிரோடு திரும்பாத, உடல்கள் மீட்கப்படாதவர்களின் நினைவாக இங்கே கூடியிருக்கின்றோம். கடல் விபத்துக்களை செய்திக் கதைகளாகவோ, இறப்புகளை எண்களாகவே எண்ண வேண்டாம். அவைகள் பலரின் பெயர்கள், குடும்பப்பெயர்கள், முகங்கள் மற்றும் கதைகள். உடைபட்ட உயிர்கள், நொறுங்கிய கனவுகள். தங்களின் இதயத்தில் நம்பிக்கைகளை சுமந்து சென்று, பயத்தில் மூழ்கிப்போன எத்தனையோ சகோதர சகோதரிகளை நினைக்கின்றேன். வார்த்தைகள் அல்ல செயல்களே இத்தகைய சூழலை எதிர்கொள்வதில் நமக்குத் தேவை. எனினும் அதற்கு முன்பாக நாம் குறைந்த அளவேனும் அமைதி, அழுகை, இரக்கம் மற்றும் செபத்தின் வழியாக மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்பொழுது இந்த சகோதர சகோதரிகளின் நினைவாக ஒரு சில நிமிடங்கள் அமைதியில் செலவழிக்க உங்களை நான் அழைக்கின்றேன்: அவர்களின் சோகம் நம்மைத் தாக்க அனுமதிப்போம்.
கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்களைக் காப்பாற்றுவது மனிதகுல கடமை.
ஏராளமான மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேடுவதில் சச்சரவையும், ஏழ்மை மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளையும் உணர்கிறார்கள், மத்திய தரைக்கடலின் அலைகளில் இறுதியான நிராகரிப்பையும் காண்கின்றார்கள். ஆகவே இந்த அழகான கடல் பல சகோதர சகோதரிகள் புதைக்கப்படும் உரிமையற்ற ஒரு பெரிய கல்லறையாக மாறிவிடுகின்றது. கடலில் அடக்கம் செய்வது மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரே மரியாதை ஆகும். சிறிய சகோதரன் “Fratellino என்னும் புத்தகத்தின் கதாநாயன் தனது கடுமையான பயணத்தின் முடிவில் குய்னேயாவின் குடியரசிலிருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படுகிறான். கடலின் மேல் நீ அமர்கின்றபோது, நீ நாற்சந்தியில் இருக்கின்றாய். ஒரு புறம் வாழ்க்கை மறுபுறம் இறப்பு. இவற்றைத்தவிர மற்றபடி தேர்ந்துகொள்ள எதுவும் இல்லை. அன்பு நண்பர்களே நாமும் நாற்சந்தியில்தான் இருக்கின்றோம். ஒரு கையில் மனித குலத்தை நன்மையால் வளரச் செய்யும் சகோதரத்துவம், மறுபுறம் மத்திய தரைக்கடலின் இரத்தத்தால் நிறைந்துள்ள அலட்சியங்கள். நாம் நாகரீகத்தின் நாற்சந்தியில் நம்மை காண்கின்றோம்.
மனிதர்கள் பேரம் பேசப்படும் பொருள்களாக, சிறையிடப்படக்கூடியவர்களாக, அநியாயமான வழிகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டு நாம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. மனித கடத்தல் மற்றும் மதவெறி அலட்சியத்தால் உண்டாக்கப்படும் கப்பல் விபத்து நாடகங்களை இனிமேலும் நம்மால் காண முடியாது. அலைகளில் கைவிடப்பட்டு மூழ்கும் நிலையில் இருப்பவர்கள் கட்டாயம் காப்பாற்றப்பட வேண்டும். இது மனித குலத்தின் கடமை. இது நாகரீகத்தின் கடமை.
புலம்பெயர்ந்தோரின் முன்னோடி ஆபிரகாம்
நிலத்திலும் கடலிலும் வலிமை குன்றியவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்தால், பயத்தின் முடக்குவாதத்திலிருந்து நாம் வெளியே வந்தால், மற்றவர்களை சாவிற்கு தீர்ப்பிடுதலில் ஆர்வமின்றி இருந்தால் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். இதன் வழியாக பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகளாகிய நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க அழைக்கப்படுகின்றோம். கடவுள் உண்மையாகவே தந்தை ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அவர் தனது நாட்டை விட்டு எங்கே செல்கிறார் என்று தெரியாமல் வெளியேற அழைக்கப்பட்டார். அந்நியரின் நாட்டில் ஒரு விருந்தாளியாக மற்றும் திருப்பயணியாக, இருந்த அவர் தனது கூடாரத்தை கடந்து செல்லும் வழிப்போக்கர்களை வரவேற்றார். தனது நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வீடற்றவராக இருந்த அவர், அனைவருக்கும் வீடாகவும், சொந்த நாடாகவும் இருந்தார். அவருடைய விருந்தோம்பலின் பிரதிபலனாக வளமையினை பரிசாக பெற்றார். இதன்வழியாக மத்திய தரைக்கடலின் வேர்களில் விருந்தோம்பல், கடவுளின் பெயரால் அந்நியருக்கு அன்பு செலுத்துதல் ஆகியவை இருக்கின்றது. நம்முடைய தந்தை ஆபிரகாமைப்போல் நாம் வளமான எதிர்காலத்தைக் கனவு காணவேண்டும்.
நம்பிக்கையாளர்களாகிய நாம் இணக்கம் மற்றும் சகோதரத்துவ வரவேற்பில் கட்டாயம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். சமய குழுக்களுக்கிடையேயான உறவுகள் என்பது எளிதானதல்ல. தீவிரவாதத்தின் மரப்புழு மற்றும் அடிப்படைவாதத்தின் கருத்தியல் பிளேக் ஆகியவை உண்மையான சமூகங்களின் வாழ்வை அரிக்கின்றன. இந்த வகையில் இவ்விடத்திலிருந்து வெகுதூரத்தில் அல்ல, நமதருகில் வாழ்ந்த கடவுளின் மனிதன் எழுதியதை எதிரொலிக்க விரும்புகின்றேன். யார் ஒருவரும் தன்னுடைய அயலவருக்கு எதிராக இதயத்தில் வெறுப்பை வைத்திருக்க வேண்டாம். அதற்கு மாறாக அன்பு கொண்டிருக்கட்டும், ஏனெனில் ஒருவன் யாராவருது ஒருவருக்கு எதிராக வெறுப்பை உணர்ந்தாலும், அவன் கடவுளுடன் சமாதானத்துடன் இருக்க முடியாது. ஒரு மனிதனுடைய ஆன்மாவில் கோபம் சேகரிக்கப்பட்டிருக்கும் வரை கடவுளால் அவனது செபம் கேட்கப்படமாட்டாது.
நீங்கள் தான் மர்சேய்லின் எதிர்காலம்
இன்று மர்சேய்லும் பல்வேறு சமயங்களின் பன்மைத்தன்மையால் குறிக்கப்படுகின்றது, சந்திப்பு அல்லது முரண்பட்டிருத்தல் என்னும் குறுக்குச் சாலைகளில் நிற்கின்றது:. சந்திப்பின் பாதையை தேர்ந்துகொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை கூறுகின்றேன். மனிதகுல வளர்ச்சி மற்றும் ஒன்றிணைப்பினை வளர்க்க உங்களின் ஆதரவையும் உறுதியான அர்ப்பணிப்பையும் கொடுப்பதற்காய் நன்றி. புலம்பெயர்ந்தோருக்காக பணிபுரியும் பல்வேறு குழுக்களோடு நீங்கள் இங்கே இருப்பது நல்லது. Marseille-Espérance இது சகோதரத்துவம், அமைதியான ஒன்றிணைந்த வாழ்வு ஆகியவற்றை வளர்க்கும் பல்சமய உரையாடலுக்கான ஒரு அமைப்பு. சமீபத்தில் இறந்த ஆறாம் ஆண்டு நினைவுகூறப்பட்ட Jules Isaac, போன்ற உரையாடலின் முன்னோடிகளின் வாழ்க்கையை உற்றுநோக்குவோம். நீங்கள் தான் மர்சேய்லின் எதிர்காலம். தொய்வின்றி முன்னேறிச் செல்லுங்கள், அதன்வழியாக இந்நகரம் பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் உலகின் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும்.
தாவீது சாசோயில் அவர்களின் வார்த்தைகள்
இதற்கு முந்தைய மத்திய தரைக்கடல் பகுதி கூட்டத்தின்போது பாரியில் பேசப்பட்ட தாவீது சாசோயில் அவர்களின் வார்த்தைகளை குறிப்பிட விரும்புகின்றேன். பாக்தாத்தில், கலிப்பா அல் மாமுன் அவர்களின் ஞான வீட்டில், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் புனித புத்தகங்கள் மற்றும் கிரேக்க தத்துவங்களை படிப்பதற்காக சந்திப்பது வழக்கம். இன்று நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கை அற்றவர்கள் அவைரும் ஒன்றாக சிலைகளுக்கு எதிராக போராடவும், சுவர்களை இடித்துத்தள்ளவும், உறவுப்பாலங்களை கட்டியெழுப்பவும் புதிய மனிதத்திற்கான பொருட்களை கொடுக்கவும் அந்த ஞான வீட்டை கட்டியெழுப்ப வேண்டியதன் தேவையை உணர்கின்றோம். நம்முடைய நேரத்தை இன்னும் ஆழமாக உற்றுநோக்கும்போது, பிறரை அன்பு செய்தவற்கு கடினமாக இருக்கும்போது அவர்களை இன்னும் அதிகமாக அன்பு செய்வது தான், நம்முடைய இலக்கில் கவனமாக இருப்பதற்கு நாம் விதைக்கும் விதைகள் என நம்புகின்றேன். மத்திய தரைக்கடல் நமக்கு அளிக்கும் பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படுவதை நிறுத்துவோம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நம் அனைவருக்குமான இருப்பு இதனைச் சார்ந்துள்ளது.
சகோதர சகோதரிகளே, மத்திய தரைக்கடல் பிரச்சனைகளை ஒன்றாக இணைந்து சந்திப்போம், கப்பல் விபத்துக்களுக்கு நம்பிக்கை அளிக்காமல் இருப்போம். ஒன்றாக இணைந்து அமைதியின் சுவரை உருவாக்குவோம்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்