தேடுதல்

துறைமுக நகரமான மர்சேய்ல் துறைமுக நகரமான மர்சேய்ல் 

துறைமுக நகரமான மர்சேய்ல்

நாட்டின் மிக முக்கியமான கடல் துறைமுகமான மர்சேய்லில் 19 ஆம் நூற்றாண்டில் ஆல்பி கோட்சா அட்சூரா மாநிலத்தால் கட்டப்பட்ட புதிய துறைமுகத்தினால் இது மேலும் புகழ்பெற்று விளங்குகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக் கடற்கரையோரமாக அமைந்துள்ள மர்சேய்ல் ஒரு துறைமுக நகரமாகும். மக்கள் தொகை வகையில் பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகவும், மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது. ஏறக்குறைய 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள். இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டையக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது. மர்சேய்ல் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம். ரோமன் கத்தோலிக்கர் 600,000, இஸ்லாமியர் 1,50,000 முதல் 2,00,000, அர்மேனிய கிறிஸ்தவர் 80,000, யூதர் 80,000, சீர்திருத்த கிறிஸ்தவர் 10,000, கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் 10,000, பௌத்தர் 3,000 என்று அங்குக் காணப்படுகின்றனர்.

பாரிஸ் மற்றும் லியோனுக்குப் பிறகு பிரான்சில் மூன்றாவது பெரிய பெருநகரப் பகுதி மர்சேய்லில் உள்ளது. கிழக்கே, புறநகர்ப் பகுதியில் உள்ள சிறிய மீன்பிடி கிராமமான காலெலோங்குவில் தொடங்கி, காசிஸ் மற்றும் கலான்குஸ் வரை நீண்டுள்ளது. கரடுமுரடான கரையோரப் பகுதி, சிறிய நுழைவாயில்களுடன் குறுக்கிடப்பட்டுள்ளது. கிழக்கே இன்னும் தொலைவில் 3,763 அடி உயரமுள்ள புனித பாமெ மலை இலையுதிர் மரங்களின் காடுகளில் இருந்து எழும்புவது போல டூலோன் நகரம் மற்றும் பிரெஞ்சு ரிவியரா பகுதியில் காட்சியளிக்கின்றது. மர்ர்சேய்லுக்கு வடக்கே, தாழ்வான கார்லபன் மற்றும் எட்டோயில் மலைத்தொடர்களுக்குத் தொலைவில்  1,011 மீ அதாவது 3,317 அடி உயரமுள்ள புனித விக்டோயர் மலை உள்ளது. மர்சேய்லின் மேற்கில் எல்'எஸ்டேக்குவே இன் முன்னாள் கலைஞர்களின் காலனியும், மேற்கில் கோட் ப்ளூ, லயன் வளைகுடா, ரோன் டெல்டாவில் உள்ள கேமர்கு பகுதி ஆகியவையும், நகரின் வடமேற்கில் மரிக்னேனில் எடாங் டி பெர்ரேயில் விமான நிலையமும் அமைந்துள்ளது. 

மர்சேய்ல் துறைமுக வரலாறு

தெற்கு பிரான்சின் மிகப்பெரிய நகரமாகவும், மத்திய தரைக்கடலின் மிகச்சிறந்த துறைமுகமாகவும் விளங்குகின்றது மர்சேய்ல். நாட்டின் மிக முக்கியமான கடல் துறைமுகமான மர்சேய்லில் 19 ஆம் நூற்றாண்டில் ஆல்பி கோட்சா அட்சூரா  மாநிலத்தால் கட்டப்பட்ட புதிய துறைமுகத்தினால் இது மேலும் புகழ்பெற்று விளங்குகின்றது. பிரான்சின் பழமையான நகரங்களில் ஒன்றான மர்சேய்ல் என்னும் மாசாலியாவை அயோனியாவில் உள்ள ஃபோசியா நகரத்தைச் சேர்ந்த கிரேக்க குடியேற்றவாசிகள் கிமு 600 இல் நிறுவினர். பல நூற்றாண்டுகளாக, இது ரோமானியர்கள், லிகுரியர்கள், பார்பரியர்கள், அரேபியர்கள் மற்றும் சரசெனியர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டது. கிமு 123 இல், இப்பகுதி ஒரு உரோமானிய காலனியாக மாறியது. நீண்ட காலமாக ரோம் மற்றும் கலியா உடன் இணைக்கும் வர்த்தக பாதையில் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்கியது. ரோமானியர்கள் கலாச்சாரம் மற்றும் கலையைக் கொண்டு வந்தனர், பாலங்கள் மற்றும் நீர்வழிகளைக் கட்டினர், நகர்ப்புற மையத்திற்கு மாசிலியா என்று ஒரு புதிய பெயரைக் கொடுத்தனர். அதன் பின்னர், அரேபியர்களின் கீழ், இஸ்லாமியர்கள் மசூதிகள் மற்றும் பல விற்பனை அங்காடிகளைக் கட்டி புதிய விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தினர். இடைக்காலத்தில் மர்சேய்ல், மிகவும் சுறுசுறுப்பான வர்த்தகத்தில், துறைமுகப்பணியில் சிறந்து விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து நகரம் அதன் தற்போதைய தோற்றத்தை பெறத் தொடங்கியது. பிறகு, 2013 இல் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 60 கோடி யூரோக்கள் செலவில் புதுப்பிக்கப்பட்ட செயல்பாடுகளால் விளைந்த இயற்கை காட்சிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள், பொதுமக்களின் பார்வைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. குழப்பமான பல பிரச்சனைகள் நகரில் இருந்தபோதிலும் சமகால நகரமாக, வரவேற்கும் நகரமாக இயற்கை அழகுடன் மர்சேய்ல் விளங்குகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2023, 10:59