திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

திருத்தந்தையின் 44 ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 23 சனிக்கிழமை வரை பிரான்சிஸ் மர்சேய்ல் நோக்கி இரண்டு நாள் பயணத்தினை மேற்கொள்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 5.30 மணிக்கு தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, வத்திக்கானில் உள்ள புனித அன்னை தெரசாவின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையினரால் நடத்தப்படும் தோனோ தி மரியா இல்லத்தில் இருக்கும் பெண்கள் 20 பேர் அடங்கியக் குழுவைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  அதன்பின் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு தனி வாகனத்தில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29 கிமீ பயணம் செய்து பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார். பியுமிச்சினோ பகுதியைத் தன்னுள் கொண்டிருக்கும் Porto-Santa Rufina மறைமாவட்ட ஆயர் Gianrico Ruzza அவர்கள் விமான நிலையம் வந்திருந்து திருத்தந்தைக்குத் தன் வாழ்த்துக்களை வழங்கினார். அதன்பின், A320 என்னும் இத்தாலிய விமானத்தில் மர்சேய்ல் நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. 713 கிமீ தூரத்தை 1 மணி  40 நிமிடங்களில் கடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியை விட்டு பிரான்சில் உள்ள மர்சேய்ல்க்கு வான்வழியாக பயணம் செய்யும் வேளையில் இத்தாலிய நாட்டின் அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லாவிற்குத் தன் வாழ்த்துச்செய்தியினையும் அனுப்பியுள்ளார்.

இத்தாலிய அரசுத்தலைவருக்கான தந்திச்செய்தி

மர்சேயிலில் நடைபெறும் மத்திய தரைக்கடல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் உரோமிலிருந்து புறப்படுவதாக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவை மற்றும் மத்திய தரைக்கடல் நகரங்களை ஒன்றிணைக்கும் கூட்டத்தில் பங்கேற்று கலாச்சார உரையாடலை வளர்ப்பதற்கும், அமைதிக்கான வழிகளை ஊக்குவிப்பதற்கும் செல்வதாக அத்தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது இந்தப் பயணத்தில் இத்தாலிய மக்களின் ஆன்மிக மற்றும் சமூக நல்வாழ்வுக்காக செபித்து தன் ஆசீரை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 23 சனிக்கிழமை வரை பிரான்சிஸ் மர்சேய்ல் நோக்கி இரண்டு நாள் பயணத்தினை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய தரைக்கடல் கூட்டங்களின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்று அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றி சனிக்கிழமை இரவு உரோம் சாந்தா மார்த்தா இல்லம் திரும்ப உள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2023, 10:51