தேடுதல்

அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான திருத்தந்தையின் உரை

ஒன்றிணைந்த நம்பிக்கை என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட எனது இந்த பயணம், ஒன்றிணைந்த நம்பிக்கையுடன், பொது நன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

செப்டம்பர் 2 சனிக்கிழமை மங்கோலியா நாட்டின் அரசியல் மற்றும் மதப்பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசுத்தூதுவர்கள், சமூக மற்றும் கலாச்சாரப்பிரதிநிதிகள் என  ஏறக்குறைய 700 பேருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை

அன்புக்குரியவர்களே உங்களின் அன்பான வரவேற்பு மற்றும் கனிவான வார்த்தைகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன், உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகின்றேன்.  நான் இங்கே இருப்பதில் பெருமிதமும், இந்த குறிப்பிடத்தக்க பரந்த நிலத்தில், பயணத்தின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து முழுமையாக உணர்ந்துள்ள மக்களிடத்தில் இப்பயணத்தை மேற்கொண்டதற்காக மகிழ்ச்சியும் அடைகின்றேன். மரியாதையோடும் எதிர்பார்ப்புகளோடும் மங்கோலிய நிலத்தின் பரம்பரியமான கம்பீரமான இந்த வட்ட கூடாரத்தில் உங்களை சந்திப்பதற்கும், உங்களோடு நன்றாக அறிமுகமாகிக் கொள்வதற்கும் இதோ நான் உங்களிடையே அமைதி மற்றும்  மகிழ்ச்சியான இதயத்தோடும் வந்துள்ளேன். மனித ரீதியாக வளப்படுத்தப்பட்ட நட்போடு ஒரு பயணியாக உங்கள் முன் நிற்கின்றேன்.

மங்கோலிய திருப்பீட உறவு

நண்பர்களின் வீடுகளில் நுழையும்போது, பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதும், முந்தைய சந்திப்புகளை நினைவு கூர்வதும் ஒரு நல்ல வழக்கம். மங்கோலியா மற்றும் திருப்பீடத்திற்கான உறவு மிகவும் சமீபமானது: இந்த ஆண்டு இருதரப்பு உறவுகள் ஒருங்கிணைக்கப்பட்டதற்கான கடிதம் கையொப்பமான பதிமூன்றவாது ஆண்டை நினைவுகூர்கின்றோம். 777 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக 1246 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கார்பைன் துறவி ஜான் ஆஃப் பியான் டெல் அவர்கள் திருத்தந்தையின் தூதுவராக மங்கோலியாவின் மூன்றாவது பேரரசரான குயுக்வை சந்தித்தார். திருத்தந்தை நான்காம் இன்னொசென்ட் அவர்களின் அதிகாரப்பூர்வ தகவலை கிராண்ட் கான் என அழைக்கப்படும் செங்கிஸ்கானிடம் அளித்தார். அதன் பிறகு மிக குறுகிய காலத்தில் பதில் கடிதமானது கிராண்ட் கான் அவர்களின் முத்திரையுடன் கிடைத்தது. அந்த பாரம்பரிய மங்கோலிய கடிதம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த கடிதமானது வத்திக்கான் நூலகத்தில் இன்று வரை பராமரிக்கப்படுகிறது. இன்று அதன் உயர்தரம், அதிநவீனத்துவ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அக்கடிதத்தின் அங்கீகரிக்கப்பட்ட நகலினை அளிப்பதில் பெருமிதம்  கொள்கின்றேன். இது நம்முடைய வளரும் மற்றும் புதுப்பிக்கப்படும் பண்டைய உறவின் அடையாளமாகவும் இருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள உங்களுடைய குழந்தைகள் உங்களது ஜெர்கூடாரத்தின் கதவருகில் நின்று தூரத்தில் நிற்கும் கால்நடைகளின் தலைகளை உற்றுநோக்கிக் கணக்கிட்டு அந்த எண்ணை தங்களின் பெற்றோர்களிடம் கூறுவார்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். நாமும் நம்மைச் சுற்றியுள்ள பரந்த எல்லைகளை உற்றுநோக்குவதன் வழியாகவும், பரந்துபட்ட, உலகளாவிய பார்வைக்காக குறுகிய முன்னோக்கு பார்வைகளை கைவிடுவதன் வழியாகவும்  பயனடைகின்றோம். புல்வெளிகளில் பிறந்த நாடோடி வாழ்க்கை, எல்லா எல்லைகளிலும் பரந்து விரிந்து, பல்வேறு கலாச்சாரங்களின் மகத்தான அம்சமாக உள்ளது என்பதே உங்களது ஜெர் என்னும் வட்ட கூடாரங்கள் காட்டும் படிப்பினையாகும்.  

ஜெர் எனப்படும் பாரம்பரிய கூடாரங்கள் 

ஜெர் என்று சொல்லப்படும் வட்ட வடிவிலான கூடாரங்கள் கிராமப்புறம் மற்றும் நகரமயமாக்கப்பட்ட இடங்களிலும் உள்ளன. அதுபோல முதுமை மற்றும் இளமை ஆகிய இரண்டு வாழ்க்கையையும் இணைக்கும் பாரம்பரிய மற்றும் நவீன திருமணங்கள் நடைபெறும் இடமாகவும் காட்சியளிக்கின்றன. இதன் வழியாக மங்கோலிய மக்களின் தொடர்ச்சிக்கு சாட்சியாக விளங்குகின்றன. குறிப்பாக சமீபத்திய பத்தாண்டுகளில் வளர்ச்சி மற்றும் ஜனநாயகம் சார்ந்த மிகப்பெரிய உலகளாவிய சவால்களிலும் பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரை மக்கள் தங்களின் வேர்களை பாதுகாத்து வருகின்றனர். மங்கோலியா ஒரு அமைதியான வெளியுறவுக் கொள்கையோடு தொடர்கின்ற ஒரு ஜனநாயக நாடு, அதேவேளையில் உலக அமைதியின் சார்பாக தனது முக்கிய பங்களிப்பையும் முன்மொழிகின்றது. இந்நாட்டில் மரண தண்டனை அதன் நீதி அமைப்பில் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

காலநிலை உச்சநிலைகளுக்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்ளும் உங்களின் வட்ட வடிவ கூடாரங்கள் பலதரப்பட்ட அமைப்புகளில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொடுக்கின்றன. இதுதான் மங்கோலிய பேரரசின் பரந்துபட்ட எல்லை விரிவாக்கத்தின் காவிய காலத்தின் நிகழ்வு. எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாண்டு 860 ஆம் ஆண்டு செங்கிஸ்கான் அவர்களின் பிறப்பு விழாக் கொண்டாடும் ஆண்டில் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உண்மை என்னவெனில் இப்பேரரசு பல வித்தியாசமான நிலங்களை பல நூற்றாண்டுகளாக அரவணைத்த தன்மையானது உங்களின் முன்னோர்களின் குறிப்பிடத்தக்க திறனையும் மற்றும் பொது வளர்ச்சிக்காக தங்களின் சேவையை அளிக்கு நற்பண்பையும் எடுத்துரைக்கின்றது.  

ஒன்றிணைந்த நம்பிக்கை என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட எனது இந்த பயணம், ஒன்றிணைந்த நம்பிக்கையுடன், பொது நன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் கூடிய நமக்குள் இருக்கும் பயணத்தின் திறனை இது மிக அருமையாக வெளிப்படுத்துகிறது. ஒரு பண்டைய நிறுவனமாக கத்தோலிக்க திருஅவை உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. வானம் போல் இருங்கள் என்ற கவிஞரின் வார்த்தைகள், இப்பூமியின் நிலையற்ற தன்மைகளுக்கு அப்பால் மேலெழுந்து வாருங்கள் என நம்மை ஊக்கப்படுத்துகின்றது. இன்று இந்நாட்டின் திருப்பயணிகளாகவும், விருந்தினர்களாகவும் உலகிற்கு பலவற்றை அளிக்கின்றது. நாமும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவற்றை இரக்கம், உரையாடல் மற்றும் எதிர்கால இலக்கிற்கான பார்வையாக மாற்ற முயல்வோம்.

பயார்லாலா - அனைவருக்கும் நன்றி.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2023, 12:17