தேடுதல்

திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயம் திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயம்  (REUTERS)

திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயம்

20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1996 ஆம் ஆண்டில், மரியாவின் மாசற்ற இதய சபையின் பிலிப்பீன்ஸ் மறைப்பணியாளர் வென்செஸ்லாவ் செல்கா பாடிலாவுக்கு நன்றியாக இப்பேராலயம் உருவாக்கப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலன்பாதர் உள்ளூர் நேரம் மாலை 3.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 1.15 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து 3.9 கி.மீ. தூரம் காரில் பயணித்து திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயம் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயம்

திருத்தூதர்கள் பேதுரு-பவுல் பேராலயமானது, நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பயான்சுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1996 ஆம் ஆண்டில், மரியாவின் மாசற்ற இதய சபையின் பிலிப்பீன்ஸ் மறைப்பணியாளர் வென்செஸ்லாவ் செல்கா பாடிலாவுக்கு நன்றியாக உருவாக்கப்பட்டது. மறுபுறம், நவீன கதீட்ரலின் கட்டுமானம், 2002 இல், செர்பிய கட்டிடக் கலைஞர் ப்ரெடாக் ஸ்டூபரின் திட்டத்தின் அடிப்படையில் கட்டத் தொடங்கப்பட்டது. உலான்பாதரின் அப்போஸ்தலிக்க நிர்வாக இல்லமானது 2003  ஆகஸ்ட் 30 அன்று, அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி பேராயர் ஜியோவானி பாட்டிஸ்டா மொராண்டினி முன்னிலையில், மக்களின் நற்செய்தி அறிவிப்பு சபையின் தலைவராக இருந்த கர்தினால் கிரெசென்சியோ செப்பால் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பாடிலாவின் ஆயர் நியமனத்தை நடத்திய மறுநாளே பேராலயத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றது. கட்டிடத்தின் அமைப்பு பாரம்பரிய யர்ட் அல்லது ஜெர் எனப்படும் மங்கோலிய நாடோடி மக்களின் வழக்கமான வாழ்விடத்தை அடையாளப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், Taizé சமூகத்தின் உறுப்பினரான Frère Mark இன் வழிகாட்டுதலின்படி, கட்டிடத்தின் மேல்மாடத்தில் 36 அரைவட்டக் கண்ணாடி ஜன்னல்கள் சேர்க்கப்பட்டன, அவற்றில் நான்கில் தென்கொரிய கலைஞர் சோ நான்கு நற்செய்தியாளார்களின் சின்னங்களை வடித்தார். ஏறக்குறைய 500 பேர் அமர்வதற்கேற்றார் போல் கட்டப்பட்டுள்ள இப்பேராலயமானது, அப்போஸ்தலிக்க நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஒரு நூலகத்தையும் அதன் பக்கவாட்டில் உள்ளடக்கியுள்ளது.

பேதுரு-பவுல் பேராலயத்தின் அருகே வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த காரில் ஏறும் முன்னர், ஜெர் என்னும் பாரம்பரிய வீட்டின் முன் பாரம்பரிய உடை அணிந்த மங்கோலியப் பெண் ஒருவர் அவருக்கு ஒரு வெளிர் நீல நிற துண்டால் சுற்றப்பட்ட குவளையில் பாரம்பரிய முறைப்படி பாலினை அளித்தார். அவ்வில்லத்திற்குள் மங்கோலிய நாட்டு கர்தினாலுடன் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Tsetsege என்னும் பெண்மணியைச் சந்தித்து உரையாடினார்.  இப்பெண்ணே ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு முன்னர் குப்பையில் இருந்து மரத்தாலான அன்னை மரியாவின் திருஉருவச்சிலையைக் கண்டெடுத்தவர். அச்சிலையே இன்று திருத்தூதர் பேதுரு-பவுல் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்கள் அப்பெண்ணோடு உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த காரில் வலம் வந்தபடி 8 மறைமாவட்டங்களைச் சார்ந்த மக்களை ஆசீர்வதித்தார். ஆலயத்தின் முகப்பை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குத்தந்தை மற்றும் உதவிப்பங்குத்தந்தை ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.  புனித நீரால் சிலுவை அடையாளம் வரைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆலயத்திற்குள் சென்றார். பாடல்கள் மற்றும் மங்கோலிய ஆயரின் உரையுடன் ஆரம்பமானக் கூட்டத்தில் மறைப்பணி புரியும் அருள்சகோதரி, மங்கோலிய அருள்பணியாளர், மேய்ப்புப்பணியாளர் ஆகியோர் தங்களது சாட்சிய வாழ்க்கை அனுபவங்களைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை மங்கோலிய ஆயர் அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கான தனது உரையினைத் துவக்கினார். திருத்தந்தையின் உரைச் சுருக்கம் இதோ.

இவ்வாறு தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த மக்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். 

அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு உணவுக்குப்பின்  நித்திரைக்குச் சென்றார்.

செப்டம்பர் 2 சனிக்கிழமை காலை அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து அவர்களுக்கான உரை, மாலையில் ஆயர், அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கு உரை என இரண்டு உரைகளை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்துடன் தனது இரண்டாம் நாள் பயணத்தை  இனிதே நிறைவு  செய்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2023, 12:09