மங்கோலியாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
செப்டம்பர் 2 சனிக்கிழமை உலான்பாதர் உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 4.30 மணிக்கு உலன்பதார் திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 2.1 கிமீ தூரம் காரில் பயணித்து சுக்பாதர் வளாகத்தை வந்தடைந்தார், மங்கோலியாவில் தனது 43ஆவது திருத்தூதுப்பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அரசுத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.
சுக்பாதர் சதுக்கம்
சுக்பாதர் சதுக்கம் உலாபன்பாதரின் மையத்தில் 1921ஆம் ஆண்டு மங்கோலிய புரட்சிகர வீரரான டம்டின் சுக்பாதர் சீனாவிடமிருந்து மங்கோலியா சுதந்திரம் பெற்றதை அறிவித்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில், நகர அதிகாரிகள் நாட்டை உருவாக்கிய தந்தையான செங்கிஸ் கானின் நினைவாக சதுக்கத்தின் பெயரை செங்கிஸ் கான் சதுக்கம் என்று மாற்றினர், ஆனால் 2016 இல், சுக்பாதரின் சந்ததியினர் அதன் உண்மையான தொடக்கப் பெயரை மீட்டெடுப்பதற்கான சட்டரீதியானப் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். சோசலிச கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இக்கட்டிடத்தின் அருகில் மற்ற கட்டிடங்களான வீடுகள், பெரிய அரசு அரண்மனை, தபால் அலுவலகம், பங்குச் சந்தை கட்டிடம், கலாச்சார அரண்மனை, தேசிய திரையரங்கங்களான ஓபரா மற்றும் பாலே, 105 மீ. உயரத்தில் எஃகு மற்றும் நீலநிறக்கண்ணாடியில் கட்டப்பட்ட வானளாவிய கட்டிடமான ஆடம்பர விடுதி, அலுவலகங்கள் மற்றும் மாநாட்டு அறைகளை உள்ளடக்கிய ப்ளூ ஸ்கை டவர் போன்றவை உள்ளன. சதுக்கத்தின் மையத்தில் புரட்சிகர மாவீரன் டம்டின் சுக்பாதரின் குதிரையேற்றச் சிலை உள்ளது, அதே சமயம் வடக்குப் பகுதியில் சாரல் ஆர்டன் எனப்படும் அரசு மாளிகையை எதிர்கொள்ளும் வகையில் செங்கிஸ் கான், ஓகெடி கான் மற்றும் குப்லாய் கான் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய நினைவுச்சின்னமும் உள்ளது. சோசலிச காலத்தில் இவ்வளாகம், 1989 வரை வருடாந்திர சிவில் மற்றும் இராணுவ அணிவகுப்புகளுக்கானக் காட்சியாகவும், 1990 ஜனநாயகப் புரட்சியின் முக்கிய இடமாகவும் இருந்தது. இன்று இந்த இடம் அரசு விழாக்கள், தேசிய விடுமுறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்