தேடுதல்

மங்கோலியாவில் திருத்தந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

திருத்தந்தை அவர்களின் மேய்ப்புப்பணிச் சார்ந்த உள்ளூர் பயண நிகழ்வுகள் தலைநகர் உலான்பாதரில், அரசுத்தலைவர், பிரதமர், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்புடன் துவங்கியது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மாலை வத்திக்கானிலிருந்து புறப்பட்டு 9 நாடுகளைக் கடந்து செப்டம்பர் மாதம் முதல் தேதி காலை மங்கோலியாவுக்கு வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாள் முழுவதும் தலைநகர் உலான்பாதரின் அப்போஸ்தலிக்க நிர்வாகி இல்லத்தில் ஓய்வெடுத்தார். ஏறத்தாழ 9 மணி 30 நிமிடங்கள் நீடித்த தொடர் விமானப் பயணத்தால் களைப்புற்றிருந்த 86 வயது நிரம்பிய திருத்தந்தை அவர்களின் மேய்ப்புப்பணிச் சார்ந்த உள்ளூர் பயண நிகழ்வுகள் தலைநகர் உலான்பாதரில், அரசுத்தலைவர், பிரதமர், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோருடன் ஆன சந்திப்புடன் துவங்கியது. மங்கோலிய தலைநகர் உலான்பாதர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலேயே திருத்தந்தையின் இந்த 43வது வெளிநாட்டுத் திருப்பயணம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய 1500 கத்தோலிக்கர்களையேக் கொண்ட மங்கோலியாவில் மறைமாவட்டம் என்பது இல்லை என்பதும், தலத்திருஅவையின் தலைமை அப்போஸ்தலிக்க நிர்வாகம் என்றே அழைக்கப்படுவதும், அதன் தலைவராக கர்தினால் ஜியார்ஜியோ மரெங்கோ அவர்கள் இருப்பதும், இவ்வில்லத்திலேயே இத்திருத்தூதுப்பயணத்தின்போது திருத்தந்தை தங்கிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்
வரவேற்பு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்

மங்கோலியாவின் தலைநகரமான உலன்பாதர்

உலன் பேட்டர் என்றும் அழைக்கப்படும் உலன்பாதர் மங்கோலியாவின் தலைநகரமாகவும் நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் திகழ்கின்றது. இது நாட்டின் வட-மத்திய பகுதியில் ஏறக்குறைய 1,350 மீ உயரமுடைய போக்ட் கான் ஊல் மலையின் அடிவாரத்திலும், துவுல் ஆற்றின் பள்ளத்தாக்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் அரசியல், கலாச்சார, தொழில்துறை மற்றும் நிதி மையமாகவும் செயல்படுகின்றது. மேலும் மங்கோலிய இரயில் பாதை வழியாக இரஷ்யா மற்றும் சீன இரயில் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மங்கோலிய மக்கள்தொகையில் 40விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தலைநகர் உலன்பாதரில் வசிக்கின்றனர்.

1639 இல் நிறுவப்பட்ட புத்த துறவு மடாலயம் ஆரம்பத்தில் கா குரே என்றும் பின்னர் Örgöö என்றும் அழைக்கப்பட்டது. 28 இட மாற்றங்களுக்குப் பிறகு, 1778 ஆம் ஆண்டில், துல் மற்றும் செல்பே நதிகள் இணையும் இடத்தின் அருகே அதன் தற்போதைய இடத்தில் இறுதியாக நிலைபெற்றது. கான் போக்ட்டில் உள்ள "வாழும் புத்தரின்" இல்லமாகக் கருத்தப்படும் இவ்விடம் மங்கோலியர்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில், சீனாவிற்கு இடையிலான வர்த்தகத் தளமாக பயன்படுத்தப்பட்ட நகரத்தை இரஷ்யர்கள் உர்கா என்று அழைத்தனர்.

1911 இல், மங்கோலியா சீனாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது Niislel Khureheh  மங்கோலியாவின் தலைநகரமானது. 1921ஆம் ஆண்டில் இது மங்கோலியாவின் புரட்சிகரத் தலைவரான டாம்டினி சுக்பாதர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. மங்கோலியாவை இரஷ்ய ஜெனரல் அன்ஜெர்ன் வான் ஸ்டெர்ன்பெர்க்கின் துருப்புக்களிடமிருந்தும், சீன ஆக்கிரமிப்பிலிருந்தும், சோவியத் செம்படையிலிருந்தும் மங்கோலியாவை விடுவித்த டாம்டினி சுக்பாதரின் நினைவாக "சிவப்பு ஹீரோ" என்று பொருள்படும் உலான்பாதர் என்று இந்த நகருக்குப் பின்னர் பெயரிடப்பட்டது. 1924 இல் மங்கோலிய  நாடு மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டு,  பின்னர் சோவியத் பாதையில் வழிநடத்தப்பட்டது. மத்திய சதுக்கம், நினைவுச்சின்னங்கள், அரசு கட்டிடங்கள், பெரிய தொழில்துறை மாவட்டங்கள், தொழிலாளர்களுக்கான தொகுதி குடியிருப்புகள், பலதரப்பட்ட கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.

உலான்பதார் பாகனூர், பாககங்கை, பயங்கோல், பயான்ஸூர்க், சிங்கெல்டேய், கான் உல், நலைக், சோங்கினோ கைர்கான் மற்றும் சுக்பாதர் என ஒன்பது மாவட்டங்களாக (düüregs) பிரிக்கப்பட்டுள்ளது. தலைநகரம் கிழக்கிலிருந்து மேற்காக நீண்டு பொதுவெளியானது தைவ்னி ஆர்கான் சோலூ, அமைதிப்பகுதி என்று அழைக்கப்படுகிறது, இப்பகுதி மங்கோலிய பாராளுமன்ற கட்டிடத்தின் முன், திறந்தவெளியாக, மத்திய சதுக்கமான சுக்பாதர் வரை நீள்கின்றது. சதுக்கத்தின் மையத்தில் மாவீரன் சுக்பாதரின் குதிரையேற்றச் சிலையும், நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளின் உச்சியில், 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் பேரரசின் மாபெரும் தலைவரான செங்கிஸ் கானின் பெரிய சிலையும் உள்ளது. நகரத்திற்கு வெளியே, துல் ஆற்றின் கரையில், செங்கிஸ் கானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு குதிரையேற்ற சிலையானது 40 மீட்டர் உயரத்தில் 250 டன் துருப்பிடிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சதுக்கத்திற்கு அருகில், பாராளுமன்றம், கலாச்சார அரண்மனை, ஓபரா மற்றும் பாலே தேசிய திரையரங்குகள், பங்குச் சந்தை கட்டிடம்,  புத்தர் பூங்கா ஆகியவை உள்ளன. நகரைச் சுற்றியுள்ள புனிதமானதாகக் கருதப்படும் சிங்கெல்டேய், பயான்சுர்க், போக்ட்கான் மற்றும் சோங்கினோ கைர்கான் என்னும் நான்கு மலைகள், வெளிப்புறப் பகுதிகளின் எல்லைகளாக உள்ளன. நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில், இரண்டாம் உலகப் போரில் ஒன்றாகப் போராடிய இரஷ்யர்கள் மற்றும் மங்கோலியர்களை கௌரவிக்கும் சோவியத் கால நினைவுச்சின்னமான ஜைசான் நினைவுச்சின்னம் மற்றும் எட்டாவது வாழும் புத்தரும் மங்கோலியாவின் கடைசி மன்னருமான போக்ட் கானின் குளிர்கால அரண்மனையும் உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த நகரம் 100க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் கியிட் எனப்படும் மடங்களைக் கொண்டிருந்தது. அவற்றில் பல 1937 ஆம் ஆண்டில் ஸ்டாலினிச காலத்தில் அழிக்கப்பட்டன.

600க்கும் மேற்பட்ட துறவிகளுடன் 1838இல் கட்டப்பட்ட நகரின் முக்கிய மடாலயமான Khiid, மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க Choijin Lama துறவுமட அருங்காட்சியகம் நாட்டிற்கு சிறப்பு சேர்க்கின்றன. அருங்காட்சியகங்களில் தனிச்சிறப்புடன் விளங்கும் மங்கோலிய வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம் புரட்சியின் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. கற்காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் அருங்காட்சியகம், பல்வேறு மங்கோலிய இனக்குழுக்களின் சேகரிப்புகள் அடங்கிய அருங்காட்சியகம், அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம், மங்கோலிய தலைநகரின் வரலாற்றைக் கண்டறிய உலன்பாதர் நகரத்தின் அருங்காட்சியகம் என பல உள்ளன. கத்தோலிக்கர்களுக்கான அடையாளங்களாக திருத்தூதர்கள் புனித பேதுரு-பவுல் பேராலயம், அன்னை மரியா ஆலயம், நல்ல ஆயன் ஆலயம், புனித சோபியா ஆலயம், திருக்குடும்ப ஆலயம் ஆகியவை உள்ளன.

புவியியல் இருப்பிடம் காரணமாக உலகின் குளிர்ந்த தலைநகராகத் திகழும் உலான்பாதர் குறுகிய கோடைகாலம் மற்றும் நீண்ட உறைபனிகொண்ட  மிகவும் வறண்ட குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. இக்காலங்களில் நாட்டின் வெப்பநிலை -30 டிகிரி வரை குறைந்துக் காணப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2023, 11:37