தேடுதல்

வத்திக்கான் மருந்தகப் பணியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் மருந்தகப் பணியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மருந்தகப்பணி ஒரு மறைப்பணி – திருத்தந்தை

மருந்துகளை விற்பனை செய்வதுடன், மிகவும் பலவீனமானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆகியோர் மேல் கவனம் செலுத்தும் பணியினைச் செய்வதும் அவசியம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மருந்துகளை வழங்கும் தங்கள் கைகளின் வழியாக, துணிவு, அருகிருப்பு ஆகியவற்றை வழங்குகின்றார்கள் என்றும், மருந்தகப்பணி என்பது ஒரு தொழில் அல்ல மாறாக ஒரு மறைப்பணி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

செப்டம்பர் 18 திங்கட்கிழமை வத்திக்கான் மருந்தகத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் பணியாளரர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்தினை வழங்கும் தங்கள் கரங்களின் வழியாக, கருணை மற்றும் துணிவை வழங்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.    

திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல் மற்றும் ரோமன் கூரியாவின் நேரடி பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டாலும், மற்றவற்றிலிருந்து வேறுபடாது பிறரன்புப் பணிகளுக்கான துணையாகவும் செயல்பட்டு வருகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்துகளை விற்பனை செய்வதுடன், மிகவும் பலவீனமானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆகியோர் மேல் கவனம் செலுத்தும் பணியினைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.

வத்திக்கான் ஊழியர்கள் மற்றும் வத்திக்கான் நகரத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, குறிப்பிட்ட மருந்துகள் தேவைப்படுபவர்களை இலக்காகக் கொண்ட உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதில் முதிர்ந்தவர்களுக்கு மருந்துகளை விட அக்கறை, புன்சிரிப்பு, ஆறுதல் நிரம்பிய வார்த்தை, கருணை இவைகளே அதிகமாகத் தேவைப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

பொறுமையாக இருங்கள், பொறுமையே அன்பை நோக்கி நம்மை முன்னோக்கிச் செலுத்தும் ஒரே வழி என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு கருணையுடன் நீங்கள் மருந்தினை  வழங்கும் போது சிலுவையில் அறையப்பட்ட காயம்பட்ட இயேசுவுக்கே நீங்கள் பணியாற்றுகின்றீர்கள் என்றும் எடுத்துரைத்தார்.

வத்திக்கான் மருந்தகம் கமால்டோலிஸ் துறவியான திருத்தந்தை 16 கிரகோரியின் கனவு என்றும், அருளாளர் ஒன்பதாம் பியோ இக்கனவை நனவாக்கியவர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செயின்ட் ஜான் ஆஃப் காட் சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வத்திக்கானின் மருந்தகமாக சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் எடுத்துரைத்தார்.  

குறிப்பாக இரண்டாவது வத்திக்கான் சங்கத்தின் போது கர்தினால்கள், ஆயர்கள் என அனைவருக்கும் மருந்துகளை வழங்குவதில் வத்திக்கான் மருந்தகம் சிறப்பாக செயல்பட்டதை எடுத்துரைத்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 செப்டம்பர் 2023, 14:05