ஹவாய் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஹவாய் தீ விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மிக நெருக்கத்தையும் வெளிப்படுத்தி இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்ட தந்திச்செய்தியானது, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான திருப்பீடத்தூதர் கிறிஸ்டோஃப் பியர் அவர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
மவூய் தீவைச் சார்ந்த மக்கள் பலர் பாதிக்கப்பட்டும் காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமலும் துன்புறும் வேளை அம்மக்களுக்கு வல்லமையுள்ள கடவுளின் அருளும் அமைதியும் கிடைக்கப்பெற தன்னுடைய சிறப்பான செபங்களை வழங்குவதாக அத்தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிவாரணப் பணி மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரின் மீதும், வலிமையும் அமைதியும் கொண்ட எல்லாம் வல்ல இறைவன் தன் ஆசீரை அளிக்க தான் தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டு தனது சிறப்பு ஆசீரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காட்டுத்தீயினால் ஏற்பட்ட பாதிப்பினால் இதுவரை 55 பேர் உயிரிழப்பு, மற்றும் 11,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு, 1,770க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
80 விழுக்காடு நகரம் குண்டு வீச்சால் தாக்கப்பட்டது போல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவரும் நிலையில் ஏறக்குறைய ஆயிரம் பேர் அணுக முடியாத நிலையில் காட்டுத்தீயினால் துன்புறுவதாகவும் தெரிவித்துள்ளார் ஹவாய் அரசுத்தலைவர் ஜோஷ் கிரீன்.
மேலும் எக்குவதோர் அரசுத்தலைவர் வேட்பாளர் FERNANDO VILLAVICENCIO அவர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து QUITO பேராயர் ALFREDO JOSÉ ESPINOZA MATEUS, அவர்களுக்கு இரங்கல் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்