இறுதிச்சடங்குத்திருப்பலியில் ஆயர் லூக்கா ராய்மொந்தி இறுதிச்சடங்குத்திருப்பலியில் ஆயர் லூக்கா ராய்மொந்தி  (ANSA)

தந்தையைப் போல ஆறுதல் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்

லூக்கா ரே சர்து ஒரு நம்பிக்கையுள்ள கிறிஸ்தவன், திருஅவை காரியங்களில் அதிக துடிப்புடன் செயல்பட்டவர். ஆயர் ராய்மொந்தி

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு தந்தையைப் போல மகனை இழந்த தாய்க்கு ஆறுதல் கூறி அத்தாயின் கண்ணீரையும் துக்கத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார் ஆயர் லூக்கா ராய்மொந்தி.

ஆகஸ்ட் மாதம் லிஸ்பனில் நடந்த உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று திரும்பிய லூக்கா ரே சர்து என்னும் இளைஞன் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அவரது தாயாரிடம் திருத்தந்தை தொலைபேசியில் ஆறுதல் கூறியதைக் குறித்து செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் மிலான் மறைமாவட்டத்தின் துணை ஆயர் லூக்கா ராய்மொந்தி.

ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமை மிலான் மறைமாவட்டத்தின் மர்னாத்தே என்னும் ஊரில் உள்ள புனித இலாரியோ பங்கு ஆலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்குத் திருப்பலி நிறைவேற்றிய ஆயர் ராய்மொந்தி அவர்கள், இளைஞன் லூக்காவின் தாய் திருத்தந்தையின் ஆறுதலைக் குறித்து மிகவும் மனம் நெகிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

லூக்கா ரே சர்து
லூக்கா ரே சர்து

ஒரு தந்தையைப் போல தன்னை ஆறுதல்படுத்தியதற்காகவும் தங்கள் குடும்பத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்திற்காகவும், திருத்தந்தைக்கு நன்றி சொல்லும்படி லூக்காவின் தாய் தன்னிடம் கூறியதாக எடுத்துரைத்த ஆயர் அவர்கள், லூக்கா ரே சர்து ஒரு நம்பிக்கையுள்ள கிறிஸ்தவன் என்றும், திருஅவை காரியங்களில் அதிக துடிப்புடன் செயல்பட்டவர் என்றும் எடுத்துரைத்தார்.

24 வயது இளைஞனான லூக்கா ரே சர்துவின் அடக்க சடங்கில் ஏராளமான இளையோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவில் உலக இளையோர் தின கொண்டாட்ட பாடல்கள் பாடப்பட்டது அனைவரது மனதினையும் ஈர்த்தது.

லூக்கா ரே சர்து தனது குழுவுடன் போர்டோசல்வோவில் நடந்த மறைக்கல்வி கூட்டத்தில் நோவாரா மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுடன் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்த ஆயர் அவர்கள், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் லூக்கா, உலக இளையோர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் முழு ஈடுபாட்டுடன் இறுதி வரை பங்கேற்றதாகவும் எடுத்துரைத்தார்.

இன்றைய காலகட்டத்தில் மகனை இழந்த குடும்பத்தின் வலி சந்தேகத்திற்கு இடமின்றி, சொல்ல முடியாத அளவிற்கு கொடுமையானது என்று கூறிய ஆயர் ராய்மொந்தி அவர்கள், இக்குடும்பத்தின் துயரம் உலகளாவிய திருஅவையின் நெருக்கத்துடன் சேர்ந்துள்ளது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 12:24