மங்கோலியா திருத்தூதுப் பயணம் அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் மேற்கொள்ள இருக்கும் மங்கோலிய திருத்தூதுப்பயணம் நல்ல முறையில் நடந்தேற அப்பயணத்தை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபிக்க உரோம் நகர் பாதுகாவலியாம் அன்னை மரியா பெருங்கோவிலுக்குச் சென்றார்.
ஆகஸ்ட் 30 புதன் கிழமை காலை வத்திக்கானின் ஆறாம் பவுல் அரங்கத்தில் தொடர் பொது மறைக்கல்வி உரையை திருப்பயணிகளுக்கு ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிற்பகலில் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னையிடம் மங்கோலிய பயணத்தை அர்ப்பணித்து செபித்தார்.
எந்த ஒரு பயணத்தையும் அன்னையிடம் அர்ப்பணித்து அவரின் அருள் ஆசீர் பெற்று தொடங்குவதும், அது நிறைவுபெற்றதும் அன்னைக்கு நன்றி செலுத்துவதும் திருத்தந்தையின் நற்பண்புகளுள் ஒன்றாகும். அதன்படி உரோம் நகர் பாதுகாவலியான Salus Populi Romani என்ற அன்னைமரி திருஉருவம் முன்னர் செபித்து மங்கோலியா நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணம் நன்முறையில் நடைபெற செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது 43வது திருத்தூதுப் பயணமாக ஆசியாக் கண்டத்தின் மையத்தில் இருக்கும் மங்கோலியா நாட்டிற்கு ஆகஸ்ட் 31 வியாழன் மாலை 6,30 மணிக்கு கிளம்ப உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 4 நாட்கள் கொண்ட இப்பயணத்தில் பல்சமய கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்து, தனது திருத்தூதுப் பயணத்தை செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி நிறைவு செய்து உரோம் திரும்ப உள்ளார்.
திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் நன்முறையில் நடைபெறவும் அவரது உடல் நலனுக்காகவும் சிறப்பாக செபிப்போம்.
தனது தலைமைத்துவப் பணியில் திருத்தூதுப் பயணங்களை முன்னிட்டு தொடக்கத்திலும் முடிவிலும் அன்னை மரியாவின் பெருங்கோவிலுக்குச் சென்று செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்முறை அவ்வாலயத்திற்குச் சென்றது 111 முறையாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்