விருதுக்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் விருதுக்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உண்மையானவற்றில் முனைப்புடன் செயல்பட...

கூக்குரல்களாக அல்ல மாறாக உரையாடல்களாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த தகவல் தொடர்பு சாதனங்கள் உதவ வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆக்கபூர்வமான தகவல்தொடர்பு, மோதலை அல்ல சந்திப்பின் கலாச்சாரத்தை, போரை அல்ல அமைதிக் கலாச்சாரத்தை, முன்தீர்மானங்களை அல்ல வெளிப்படையான கலாச்சாரத்தை ஆதரிக்கின்றது என்றும், தகவல் தொடர்பு உண்மையானவற்றை எடுத்துரைப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை “è Giornalismo” என்னும் பத்திரிக்கையாளர் விருதை திருத்தந்தைக்கு அளித்த விருதுக்குழு உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

எதார்த்தத்தின் கொள்கையைக் கண்டறிய எல்லோரும் முயல்கின்றனர் என்றும், எப்போதும் கண்டுபிடிப்பின் மேன்மையாகத் திகழ்கின்ற எதார்த்தமானது, மனிதனின் செயல்பாடுகள்  நன்மையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றது என்றும் கூறினார்.

தவறான தகவல், முறையற்ற அறிவிப்பு, அவதூறு, ஊழல் ஆகியவை தகவல் தொடர்பில் காணப்படும் நான்கு தவறுகள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றை விடுத்து உரையாடல் கலாச்சாரம், சந்திப்புக் கலாச்சாரம், செவிமடுக்கும் கலாச்சாரம் ஆகியவற்றை பரப்புவதில் தகவல் தொடர்பாளர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கூக்குரல்களாக அல்ல மாறாக உரையாடல்களாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த தகவல் தொடர்பு சாதனங்கள் உதவ வேண்டும் என்றும், எல்லாருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் இன மத வேறுபாடின்றி, அனைவரும் ஒன்றாக இணைந்திருக்க இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஒன்றிணைந்து கேட்டல், செபித்தல், புரிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து இருப்பது மிகவும் அழகானது என்றும், நமது வாழ்க்கையில் நடந்த, நடைபெற உள்ள அனைத்து நிகழ்வுகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறி வாழவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2023, 14:55