செப்டம்பர் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளில் சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களுக்காகவும், அவர்கள் நிறுவனங்களால் புறக்கணிக்கப்படாமல் இருக்கவும், ஒருபோதும் வெளியேற்றப்படாமல் இருக்கவும் இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 29, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீடற்ற நிலையில் தெருவில் இறக்கும் மக்கள் ஒருபோதும் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
பொருளியல் சார்ந்த பொருள்களுடன் ஒப்பிடும்போது இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் எதற்கும் மதிப்பில்லாத ‘பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும்’ பொருட்களாக மாறுவதை நாம் எப்படி அனுமதிக்கிறோம் என்றும், இந்தக் கலாச்சாரம் நம் வாழ்வில், நமது நகரங்களில், நமது வாழ்க்கை முறையை ஆதிக்கம் செலுத்த எப்படி அனுமதிக்கின்றோம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் திருத்தந்தை.
வறுமை, போதை, மனநோய் அல்லது இயலாமை காரணமாக சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றுவதை தயவுகூர்ந்து நிறுத்துவோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீடற்ற நிலையில் இருக்கும் மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வதிலும், அவர்களை வரவேற்பதிலும் நாம் கவனம் செலுத்துவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரவேற்பு கலாச்சாரம், விருந்தோம்பல், தங்குமிடம் தருவது, வீடு கொடுப்பது, அன்பை வழங்குவது, மனித அரவணைப்பைக் கொடுப்பது ஆகியவை நமது வாழ்வில் முக்கியத்துவம் பெறவேண்டும் என்றும் என்றும் தனது செப்டம்பர் மாத செபக் கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் 160 கோடி மக்களுக்குப் போதுமான அளவிற்கு வீடுகள் இல்லை என்பதும், உலகளவில் 15 கோடி மக்கள் வீடற்றவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்