இளையோரே, கடவுள் உங்களை பெயர் சொல்லி அழைக்கிறார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 3, இவ்வியாழனன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற 37-வது உலக இளையோர் தின வரவேற்பு விழாவில் தலைமைதாங்கி இளையோருக்கு வழங்கிய அருளுரை.
அன்புள்ள நண்பர்களே, உங்கள் அனைவரையும் ஒருமிக்கக் காண்பதில் நான் பெருமகிழ்வடைக்கின்றேன். மேலும் நீங்கள் எழுப்பும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தைக் கேட்கிறேன். இங்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது மிகவும் நலமாக இருக்கின்றது. இந்த நாட்களில் மட்டுமல்ல, உங்கள் நாட்களின் தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் இயேசு உங்களை அழைத்திருக்கிறார். உண்மையில், அவர் உங்களைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். நாம் ஒவ்வொருவருமே பெயர்சொல்லி அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளால் நாம் அன்புகூரப்பட்டுள்ளதால் நாம் பெயர்சொல்லி அழைக்கப்பட்டுளோம்.
கடவுள் நம்மை பெயர் சொல்லி அழைக்கிறார்
கடவுளின் பார்வையில் நாம் விலைமதிப்பற்ற குழந்தைகளாக இருக்கிறோம், நம்மை அரவணைத்து ஊக்குவிப்பதற்காக அவர் ஒவ்வொரு நாளும் நம்மை அழைக்கிறார். நம்மை ஒரு தனித்துவமான மற்றும் உண்மைத்துவம் நிறைந்த தலைசிறந்த படைப்பாக மாற்ற நம்மை அவர் அழைக்கிறார். ஆகவே, இவ்வுலக இளையோர் தினத்தில், இந்த அடிப்படை எதார்த்தத்தை அடையாளம் காண நாம் ஒருவருக்கொருவர் உதவுவோம். இந்த நாட்கள் கடவுளுடைய அன்பின் அழைப்பின் துடிப்பான எதிரொலிகளாக இருக்கட்டும், ஏனென்றால் அவருடைய பார்வையில் நாம் விலைமதிப்பற்றவர்கள்.
பல மொழிகள் மற்றும் நாடுகளின் சகோதரர் சகோதரிகளால் நட்புடன் உச்சரிக்கப்படும் உங்களின் பெயர், வரலாற்றில் தனித்துவமான செய்தியாக எதிரொலிக்கும் நாட்களாக இவை அமையட்டும். ஏனென்றால் கடவுளின் இதயம் உங்களுக்காகத் தனித்துவமானதாக விளங்குகிறது. மேலும் நாம் இருப்பதுபோலவே அன்புகூரப்ப்படுகிறோம் என்பதை நம் இதயங்களில் முழுமையாக உணரும் நாட்களாக இவை அமையட்டும் இது உலக இளையோர் தினத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுவே நம் வாழ்வின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்துள்ளது என்பதை உணர்வோம்.
பொய்த்தோற்றம் குறித்து கவனமாக இருப்போம்
அன்பான நண்பர்களே, கடவுள் உங்களைப் பெயர்சொல்லி அழைப்பதால், அவருக்கு நீங்கள் ஒரு எண் அல்ல, ஆனால், ஒரு ஆள் என்று அர்த்தம் என்பதை உணர்ந்திடுங்கள். பலருக்கு உங்கள் பெயர் தெரிந்திருந்தபோதிலும், அவர்கள் உங்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். எத்தனை ஓநாய்கள், உன்னை அன்புகூராவிட்டாலும், எனக்கு உன்னைத் தெரியும் என்று கூறி பொய்யான புன்னகையின் பின்னால் ஒளிந்து கொள்கின்றன! அவர்கள் உங்களை நம்புவதாகவும், நீங்கள் பெரிய ஆளாக ஆகிவிடுவீர்கள் என்றும் உறுதியளிக்கிறார்கள், ஆனால், நீங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாதபோது அவர்கள் உங்களைக் கைவிட்டுவிடுவார்கள்.
இவை மெய்நிகர் உலகின் மாயைகள் என்பதை உணர்ந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நம்மை ஈர்க்கும் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பல உண்மைகள் பின்னர் பொய்யானவை என்று காட்டப்படுகின்றன. ஆனால், இயேசு அப்படியல்ல. அவர் உங்களை நம்புகிறார், அவருக்கு நீங்கள் உண்மையிலேயே முக்கியமாணவர்களாக இருக்கின்றீர்கள். அப்படியானால், நாம் அவருடைய திருஅவை, அழைக்கப்பட்டவர்களின் சமூகம். நாம் சிறந்தவர்கள் அல்ல, ஆனால் அழைக்கப்பட்டவர்கள். மற்றவர்களுடன் இணைந்து, கடவுளால் பெயர் சொல்லி அழைக்கப்படும் அருள்கொடையைப் பெற்றவர்கள். நாம் இயேசுவின் சகோதரர் சகோதரிகள், ஒரே இறைத்தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களின் சமூகம்.
திருஅவையில் எல்லோருக்கும் இடமுண்டு
அன்புள்ள நண்பர்களே, நேர்மையின்மை மற்றும் வெற்று வார்த்தைகள்மேல் நம்பிக்கையில்லாத உங்களுக்கு இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது. தவறு செய்பவர்களும், தவற்றில் விழுபவர்களுக்கும் கூட இடம் உண்டு. இவர்களுக்குத் திருஅவையில் இடமில்லாதபோதெல்லாம், தயவுகூர்ந்து நாம் அவர்களுக்கு இடமளிக்க வேண்டும். ஏனெனில் திருஅவை என்பது அனைவருக்கும் கடவுளின் அழைப்பை வழங்கும் இடம்.
இயேசு யாரையும் குற்றம் சுமத்துவதில்லை, அவர் சிலுவையில் தொங்கியபோது இருகரம் விரித்து எல்லோரையும் தன்னிடம் அழைத்தார். அவர் தனது இதயத்தின் கதவுகளை ஒருபோதும் மூடுவதில்லை, மாறாக, அதனைத் திறந்து அனைவரையும் உள்ளே வருமாறு அழைக்கின்றார். ஆகவே, இந்த நாட்களில், சுதந்திரமான இதயத்தையும், மங்காத மகிழ்ச்சியையும் விட்டுச்செல்லும் அவரது அன்பின் செய்தியை அனைவருக்கும் வழங்குவோம்.
இதனை எப்படி செயல்படுத்தலாம் என்று எண்ணும்போது, உங்கள் அருகில் இருக்கும் மற்றவருடைய பெயரைச் சொல்லி அழைப்பதன் வழியாக இது சாத்தியமாகும் என்பதை உணர்ந்திடுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டறிந்து, ‘கடவுள் உங்களை அன்புசெய்கிறார், உங்களைப் பெயர்சொல்லி அழைக்கிறார்’ எனக் கூறுங்கள். நீங்கள் உண்மையிலேயே மதிக்கப்படுகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டுங்கள். ‘சகோதரரே, சகோதரியே, நீங்கள் இங்கே இருப்பது நன்மை பயப்பதாக உள்ளது’ என்று கூறுவதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம்.
நீங்களும் இயேசுவால் அனுப்பப்படுகிறீர்கள்
இயேசு தனது சீடர்களை எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அனுப்பியது போன்று உங்களையும் அனுப்புகின்றார். அவர் தனது சீடர்கள்மீது முழுநம்பிக்கை கொண்டிருந்ததுபோல உங்கள்மீதும் முழுநம்பிக்கை கொண்டுள்ளார். உங்களை விரும்பும், உங்களால் மட்டும் என்ன செய்யமுடியுமோ அதனை நம்பி ஏற்கும் உலகம் ஒன்று உங்களுக்காக உள்ளது. அங்கே சென்று பணியாற்றுங்கள் என்று உங்களைப் பணிக்கின்றார் இயேசு.
நான் மற்றவர்களுக்கு எதைக் கொடுக்கமுடியும் என்ற கேள்வியை நீங்கள் எழுப்புவீர்களானால், இயேசு தனது சீடர்களுக்குக் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கும் கூற விரும்புகின்றேன். "கடவுள் அருகில் இருக்கிறார்" (காண். லூக் 10:9) என்பதுதான் அச்செய்தி. இதுவே வாழ்க்கையின் விலைமதிப்பற்ற முத்து. கடவுள் அருகில் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் நம் வாழ்க்கையை வியப்பால் நிரப்புவதற்கு நம்மிடமிருந்து ஒரு சிறிய பதிலிறுப்பு மட்டுமே அவருக்குத் தேவைப்படுகிறது. திறமை உள்ளவர்களை இயேசு அழைக்கவில்லை, ஆனால் அவர் அழைப்பவர்களை திறமையானவர் ஆக்குகிறார். நம் முதுபெரும்தந்தை ஆபிரகாம், மோசே, பேதுரு, பவுல் ஆகியோரை அழைத்து அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர் நம் கடவுள். இவர்களில் யாருமே தகுதிபெற்றவர்கள் கிடையாது என்றாலும், இவர்கள் அனைவரும் கடவுளின் அழைத்தலால் தகுதிபெற்று அவரில் ஒன்றிணைக்கப்பட்டார்கள்.
அன்னை மரியாவிடம் கற்றுக்கொள்வோம்
நம் அன்னை மரியாவின் பேருதவியை நாம் பெற்றுள்ளோம். இந்நாட்களில் அவர் நம்மைக் கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்பதை உணர்வோம். அவர் வரலாற்றில் மிகச் சிறந்த நபர், அவருக்கு அதிக அறிவு அல்லது சிறப்புத் திறன்கள் இருந்ததால் அல்ல, ஆனால் அவர் கடவுளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளாததால் அவர் சிறந்த நபராகப் போற்றப்படுகிறார். அன்னை மரியாவின் இதயம் திசைதிருப்பப்படவோ அல்லது குழப்பமடையவோ இல்லை, மாறாக, அது இறைவனுக்காக எப்போதும் திறந்திருந்தது, எப்போதும் அவருடன் இணைந்திருந்தது. அவர் கடவுளின் வார்த்தையின் பாதையில் துணிவுடன் முன்னேறிச் சென்றார். இதன் வழியாக, அவர் உலகிற்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார். வாழ்வின் பாதையில் நாம் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை அவர் நமக்குக் கற்றுத்தருகின்றார்.
இயேசுவிலும், அவரது அன்பிலும் இணைந்திருப்போம்
நாம் அனைவரும் இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம்; நாம் அவரால் அன்புகூரப்படுவதால் அழைக்கப்பட்டுள்ளோம் என்று நான் தொடக்கத்தில் கூறியதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகின்றேன். இப்போது இரண்டு காரியங்களைச் செய்ய முற்படுவோம். முதலாவதாக, ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைப்போம், நாம் அன்புகூரப்படுவதன் மற்றும் கடவுளின் கருவூலமாகப் போற்றப்படுவதன் அழகை ஒருவருக்கொருவர் நினைவூட்டுவோம்! இரண்டாவதாக, இந்த நாட்களில் இயேசுவுடன் அடிக்கடி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் அவரிடம் கேள்விகளைக் கேட்போம். இயேசுவிலும் அவரது அன்பிலும் இணைந்திருப்போம், ஏனெனில் இந்த வழியில்தான் நமது மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. உங்கள் அனைவருக்கும் இளையோர் தின நல்வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்