தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - குவாதலுப்பே அன்னையின் காட்சி

வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் புதன் மறைக்கல்வி உரையினை திருப்பயணிகளுக்கு ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்பின் பேரார்வம் என்ற தலைப்பில் குவாதலுப்பே அன்னை மரியாவின் காட்சி பற்றி எடுத்துரைத்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆகஸ்ட் மாதம் 23 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு புதன் மறைக்கல்வி உரையினை நற்செய்தி அறிவிப்பிற்கான ஆர்வம் - நம்பிக்கையாளர்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இத்தாலி கோடை விடுமுறை, ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் உலக இளைஞர் தினக் கொண்டாட்டம் என்பன  போன்றவற்றால் புதன் பொது மறைக்கல்வி உரையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் இப்பொது மறைக்கல்வி உரையானது அதிகமான கோடை வெயிலின் காரணமாக தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் என்ற தலைப்பின் கீழ் தனது கருத்துக்களை மறைக்கல்வி உரை வழியாகப் பகிர்ந்து கொண்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குவாதலுப்பே அன்னை மரியாவின் காட்சியைக் கண்டவரான புனித ஜுவான் தியேகோ பற்றியக் கருத்துக்களை திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார். 

கூடியிருந்த மக்களுக்குத் தன் வாழ்த்தினை தெரிவித்த திருத்தந்தை சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை துவக்கி வைக்க அதனைத் தொடர்ந்து மத்தேயு நற்செய்தி 11 ஆம் அதிகாரத்தில் தந்தையும் மகனும் என்ற தலைப்பில் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரவு போர்த்துக்கீசியம், இஸ்பானியம், பிரெஞ்சு என பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டன.

மத்தேயு 11 : 25-27

அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

திருத்தந்தையின் மறைக்கல்விஉரைக்கு இப்போது செவிமடுப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை மீண்டும் கண்டறியும் நமது பயணத்தில், நற்செய்தி அறிவிப்பை வாழும் ஆதாரமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் குவாடலூப்பேப் பற்றி இன்று காணலாம். அன்னை மரியாவின் காட்சிக்கு முன்பிருந்த நற்செய்தி அறிவிப்பு குவாதலுப்பேவில் எதிர்பாராதவிதமாக உலக நலன்களுடன் சேர்ந்து வளர்ந்தது. பூர்வீகப் பழங்குடியின மக்களின் மாண்பானது வளர்ச்சிப் பாதைக்குப் பதிலாக, நிலையான அவர்களின் இடங்களை மாற்றம் செய்வது, வேறு இடத்திற்குள் கட்டாயமாகத் திணிப்பது போன்ற செயல்பாடுகளால் சிதைக்கப்பட்டது. இந்நிலையில் குவாதலுப்பே அன்னை மரியா அப்பழங்குடியின மக்களின் உடையணிந்து அவர்களது மொழியிலேயே பேசி, அன்போடு அவர்களை வரவேற்று அவர்கள் வாழும் இடத்தின் கலாச்சாரம் பெருக வழிவகுத்தார். அன்னை மரியா தனது முக்காட்டின் கீழ் அவரது பிள்ளைகளாகிய ஒவ்வொருவருக்கும் ஓரிடத்தினைக் கொண்டுள்ளார். அன்னை மரியாவில் மனிதராக உருவெடுத்த கடவுள் மக்களின் வாழ்வில் தொடர்ந்து உருவெடுத்துக்கொண்டிருக்கின்றார்.       கடவுளை மிகவும் பொருத்தமான மொழியில், அவரது தாய்மொழியில் அறிவிக்கிறார் அன்னை மரியா. ஆம், நற்செய்தி அறிவிப்பு தாய்மொழியிலேயே கடத்தப்படுகிறது. தங்களது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு கடவுளின் நற்செய்தியைக் கடத்தும் அன்னையர்கள் மற்றும் பாட்டிகளுக்கு இந்நேரத்தில் எனது நன்றியினைக் கூறிக்கொள்கின்றேன்.

நம்பிக்கை வாழ்க்கையுடன் கடந்து செல்கிறது, இந்த காரணத்திற்காகவே அன்னையர்களும் பாட்டிகளும் முதல் நற்செய்தி அறிவிப்பாளர்களாகத் திகழ்கின்றார்கள். தன்னைத் தாழ்மையாக வெளிப்படுத்தி எளிமையாகப் பேசுபவரான அன்னை மரியா லூர்து மற்றும் பாத்திமாவைப் போலவே மெக்ஸிகோவில் உள்ள டெபியாக் மலையைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரிடமும், அனைவருக்கும் பொருத்தமான, புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் இயேசுவைப் போல பேசுகிறார்.

குவாடலூப்பே அன்னை மரியாவின் காட்சியைக் கண்ட தூய ஜுவான் தியேகோவின் சான்றுள்ள வாழ்வை சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு எளிய மனிதர், பூர்வீக பழங்குடியின மக்களுள் ஒருவர்., அவர் சிறியவர்கள் வழியாக அற்புதங்களைச் செய்ய விரும்பும் கடவுளின் பார்வை அவர் மீது தங்கியிருந்தது. திருமணமானவரான தியேகோ, தனது 55ஆவது வயதில் 1531ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் செல்லும் வழியில், ஒரு மலையில் கடவுளின் தாயைப் பார்க்கிறார். அவர் அவரை "என் அன்பான சிறிய மகன் ஜுவானிடோ" என்று அழைத்து அவர் காட்சி அளித்த அவ்விடத்திலேயே தனக்காக ஓர் ஆலயம் கட்டச்சொல்லி ஆயரிடம் அனுப்பி வைக்கின்றார். எளிமை, தயார் நிலை, தாராளமனம் ஆகியவற்றுடன் அன்னைஅயை பார்த்த மகிழ்வில் ஆயரை நோக்கிச்சென்ற தியேகோ நீண்ட நேரம் காத்திருந்து அதன்பின் ஆயரைச் சந்தித்தார். தான் கண்டதை எல்லாம் ஆயரிடம் தெரிவிக்க ஆயரோ அதனை நம்ப மறுக்கின்றார். இதனால் மனம் வருந்திய தியேகோ அன்னைமரியா காட்சி அளித்த அவ்விடத்திற்கு மீண்டும் சென்று அன்னையிடம் ஆறுதல் பெற்று மீண்டும் ஆயரிடம் திரும்புகின்றார்.  ஆயரோ தியேகோவை நம்ப மனமின்றி, அவரைப் பின்தொடர இருவரை அனுப்புகின்றார். நற்செய்தி அறிவிப்பின் துன்பங்களை சவால்களை தலத்திருஅவையிடமிருந்தே எதிர்கொள்கின்றார். உண்மையில் நற்செய்தி அறிவிப்பில் நன்மைக்கு சான்று பகர்வதை மட்டுமன்று துன்பங்களை எவ்வாறு தாங்குவது என்பதை அறிந்து கொள்வதும் மிக அவசியம். இன்றும் கூட, பல இடங்களில், நற்செய்தி அறிவிப்பு மற்றும் நற்செய்தி கலாச்சாரங்களை வளர்ப்பதற்கு, மோதல்களுக்கு பயப்படாமல், இதயத்தின் துணிவை இழக்காமல் விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் இருப்பது மிகவும் தேவை.

மனமுடைந்து போன தியேகோ, அன்னை மரியாவிடம் தனக்கு பதிலாக அவரை விட சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்து இப்பணியை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றார். ஆனால் அன்னை மரியாவோ விடாமுயற்சியுடன் இருக்க தியேகோவிற்கு அழைப்புவிடுக்கிறார். நற்செய்தி அறிவிப்பில் நாம் செய்ய  நினைக்கும் செயல் நடைபெறாதபோது மனச்சோர்வடைந்து அதிலிருந்து பின்வாங்கும் சூழல் உருவாகிறது.  இதனால் சிறிய குழுக்களிலும், தனிப்பட்ட உள்ளார்ந்த தெய்வ வழிபாடுகளிலும் நம்மை நாம் நம்மை ஈடுபடுத்தி விடுகின்றோம். ஆனால் அன்னை மரியா இத்தகைய கடினமான சூழல்களில்  நமக்கு ஆறுதல் கூறி, நம்மைப் பின்தொடர்கிறார், நம்மை வளரச் செய்கிறார், ஒரு நல்ல தாயைப் போல, தனது மகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உலகின் சவால்களை எதிர்கொள்ள ஆற்றல் தருகின்றார்.

அன்னை மரியாவின் ஆறுதலான வார்த்தைகளால் உத்வேகம் அடைந்த தியேகோ ஆயரிடம் மீண்டும் செல்ல அவரோ அன்னை மரியாவை அவர் கண்டதற்கான அடையாளம் ஒன்றினைக் கேட்கின்றார். அன்னை மரியாவும் அதற்கு உறுதியளித்து உன் முகத்தையும், இதயத்தையும் சோர்வடையச் செய்யாதே: இங்கே இருக்கும் நான் உனது தாயல்லவா? என்று கூறினார் மேலும் மலையின் உச்சிக்குச் சென்று, சில பூக்களைப் பறித்து வருமாறு தியேகோவிடம் கூறினார். குளிர்காலத்தில் பூக்கள் பூக்காது என்பதை அறிந்தும் அன்னை மரியா மேல் கொண்ட நம்பிக்கையினால் மலையுச்சிக்குச் சென்றார் தியேகோ. அங்கே அன்னை கூறியது போல அழகான மலர்கள் இருப்பதைக் கண்டு அதனைப் பறித்து தனது மேலங்கியில் வைத்துக்கொண்டார். அன்னை மரியாவைத் தான் கண்டதற்கு அடையாளமாக பூக்களை மேலங்கியில் வைத்திருந்த தியேகோ அதனை ஆயருக்குத் திறந்து காட்டுகின்றார். பூக்கள் மத்தியில் அன்னை மரியாவின் உருவமும் ஆயருக்கு மட்டுமன்றி அங்குள்ள அனைவருக்கும் தெரிகின்றது. கடவுளின் தாயாம் அன்னை மரியாவின் வியத்தகு செயல்களை கண்டவர் அனைவரும் வியந்தனர். ஆயரின் அனுமதியுடன் அங்கே குவாதலுப்பே அன்னை மரியாவிற்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.  கடவுளுக்குக் கீழ்ப்படியும் மனம் கொண்டவர்களிடத்தில் கடவுளின் வியத்தகு செயல்கள் எதிர்பாராத நேரத்தில் நடைபெறும் என்பதற்கு இச்செயல் ஒரு உதாரணம்.

55 வயதான ஜுவான் தியேகோ தனது குடும்பம் உறவுகள் என அனைத்தையும் விடுத்து ஆயரின் அனுமதியுடன் அன்னையின் திருத்தல காரியங்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார். குவாதலுப்பே அன்னைமரியாவின் திருத்தலம் நோக்கி வரும் திருப்பயணிகளை வரவேற்பது, அன்னை மரியாவின் காட்சியை அற்புத செயல்களை எடுத்துரைப்பது என தன் வாழ்வை தூய்மையாக வாழ்ந்தார்.  அன்னை மரியாவின் பேராலயமாகவும், நற்செய்தி அறிவிப்பிற்கான இடமாகவும் திகழும் இத்திருத்தலமானது மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது இல்லமாகவும், விண்ணுலக இல்லமாகவும் காட்சியளிக்கின்றது. விண்ணுலகத்தில் நம்பிக்கை எளிமை மற்றும் நேர்மையுடன் வரவேற்கப்படுகின்றது.  அன்னை மரியா ஜுவான் தியேகோவிடம் கூறியது போல, அவர் நம் கண்ணீருக்கு செவிமடுக்கின்றார். நம் துன்பங்கள் மற்றும் வலிகளைக் கேட்டுக் குணப்படுத்துகின்றார். இந்த நம்பிக்கையுடன் ஆறுதல் மற்றும் இரக்கத்தின் வழிகளை. தாய்மொழியில் வெளிப்படுத்தப்படும் நம்பிக்கையை, வாழ்வில் துன்பங்களை அன்னையின் கரங்களில் ஒப்படைப்போம். அவர் இதய அமைதியுடன் நமது வாழ்வை வாழ அன்னை மரியா நமக்கு அருள்புரிவாராக.

இவ்வாறு தனது உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புர்கினோஃபாசோ,  இத்தாலி பிராச்ன்ஸ், இஸ்பெயின் ஆகிய இடங்களில் இருந்து வந்திருக்கும் திருப்பயணிகளையும், மரியன்னை ஆலயங்களைச்சார்ந்தவர்கள், மால்டா பீடப்பணியாளர்கள், உகாண்டா பாடல் குழுவினர்கள், Melizzano திருப்பயணிகள் Gallio மறைமாவட்ட ஆயர் பேராயர் Giampiero Gloder உடன் வந்திருந்தோர் ஆகியோரையும் வாழ்த்தினார்.    

அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க திருப்பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். போர் மற்றும் மோதல்களால் துன்புறும் மக்கள், காணாமல் போன குழந்தைகள், இறந்தவர்கள், ஆகியோரை நினைவு கூர்ந்த திருத்தந்தை அந்நாட்டு மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார். நாளைய தினம் திருஅவை சிறப்பிக்க உள்ள தூய பர்த்தலெமேயுவின் திருவிழாவை நினைவுகூர்ந்து புனிதரின் பரிந்துரையை நாடி அவரிடத்தில் நாட்டை ஒப்படைத்து செபிப்போம் என்றும் வலியுறுத்தினார்.  திருத்தந்தை

1991 ஆகஸ்ட் 24, அன்று சுதந்திரம் பெற்ற உக்ரைன், தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடும் நாளில், அந்த் நாட்டு மக்களுக்காக இடைவிடாது செபிக்கும் படி திருப்பயணிகள் அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேலும் இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் புதுமணத் தம்பதிகள் ஆகியோர், திருத்தூதர் புனித பர்தலோமேயு போல இயேசுவின் நேர்மையான சாட்சிகளாக இருப்பதற்கும், நம்பிக்கையுடன் துன்பங்களைத் தாங்குவதற்கும் அருள்புரியட்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்திக்காகத் துன்பப்பட்டவர்கள், போர் மற்றும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அன்பான உக்ரைன் மக்கள் ஆகிய அனைவருக்கும் புனித பர்த்தலோமியூவின் பரிந்துரையை வேண்டி செபித்தார்.

கூடியிருந்த மக்கள் ஒன்றிணைந்து விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே என்ற செபத்தை செபிக்க அதனைத்தொடர்ந்து திருத்தந்தை கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2023, 08:41