தேடுதல்

லிஸ்பனில் திருத்தந்தைக்கு வரவேற்பு

போர்த்துக்கல் அரசுத்தலைவர் திரு Marcelo Rebelo de Sousa அவர்கள் வரவேற்க, இரு சிறார் பாரம்பரிய உடையணிந்து மலர்களைக் கொடுத்து திருத்தந்தையை வரவேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லிஸ்பனில் திருத்தந்தைக்கு வரவேற்பு

1.957கிமீ தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 10.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பகல் 12.30 மணிக்கு லிஸ்பனின் Figo Maduro விமான தளத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் போர்த்துக்கல் திருப்பீடத்தூதரான பேராயர் Ivo Scapolo மற்றும் போர்த்துக்கல் நாட்டின் சிறப்புப் பாதுகாப்புபடை அதிகாரி திரு Teixeira de Abreu Fezas Vital Domingos ஆகியோர் விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்றனர். அதன்பின் தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் விமானத்திலிருந்து கீழிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை போர்த்துக்கல் அரசுத்தலைவர் Marcelo Rebelo de Sousa அவர்கள் வரவேற்க, இரு சிறார் பாரம்பரிய உடையணிந்து மலர்களைக் கொடுத்து திருத்தந்தையை வரவேற்றனர். அரச மரியாதையுடன் லிஸ்பனில் வரவேற்கப்பட்ட திருத்தந்தைக்கு அரசு அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு அரசுத்தலைவருடன் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின் அங்கிருந்து லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 10.35 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3.05 மணிக்கு 6.7 கி.மீ. தூரம் காரில் பயணித்து லிஸ்பனின் பெலெம் அரச மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை.

அரச மாளிகையில் திருத்தந்தை
அரச மாளிகையில் திருத்தந்தை

பெலேம் தேசிய மாளிகை

Palácio Nacional de Belém எனப்படும் லிஸ்பனின் அரச மாளிகை, டகோ ஆற்றை எதிர்கொள்ளும் ஒரு மலைப்பகுதியில் மோஸ்டீரோ டோஸ் ஜெரோனிமோஸுக்கு அருகில் அமைந்துள்ளது. போர்த்துக்கல் மன்னர் முதலாம் மானுவல் என்பவரால்  பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகையை 1726ஆம் ஆண்டில், பிரகன்சாவின் மன்னர் ஐந்தாம் ஜான் வாங்கினார். 1911 ஆம் ஆண்டில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாள் வரை போர்த்துகீசிய sovrani என்பவர்கள் தங்குமிடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்பின் அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது. போர்த்துகீசிய மேனுலைன் கட்டிடக்கலையின் மிக அழகான எடுத்துக்காட்டுகளில் ஒன்றான இளஞ்சிவப்பு கட்டிடம், பல்வேறு முற்றங்கள், தோட்டங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அறைகளைக் கொண்டுள்ளது. கட்டிடத்தின் ஒரு பிரிவில் குடியரசின் அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது, அதனை அடுத்து அரசுத்தலைவர்களின் நினைவுச்சின்னங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசிலிய கட்டிடக் கலைஞர் பாலோ மென்டிஸ் டி ரோச்சா அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வருங்காட்சியகத்தில் போர்த்துக்கல், ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இருந்து ஏறக்குறைய அறுபது வாகனங்கள், உலகின் மிக முக்கியமான பழங்கால வண்டிகளின் சேகரிப்புகளாக உள்ளன. மேலும், பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர வாகனங்களும் இவ்வருங்காட்சியகத்தில் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2023, 10:23