போர்த்துக்கல் நாட்டின் சிறப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
போர்த்துக்கல் நாட்டின் சிறப்பு
போர்த்துக்கல் இது வடக்கு மற்றும் கிழக்கில் ஸ்பெயினை எல்லையாகவும், தெற்கு மற்றும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் கொண்டு இபேரியா தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகராகிய லிஸ்பனுக்கு மேற்கே சிண்ட்ராவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஐரோப்பியக் கண்டத்தின் மேற்குப் பகுதியான கபோ டா ரோகா என்னுமிடம் உள்ளது. ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மடேரா, ஐரோப்பாவில் அமைந்துள்ள அசோர்ஸ் தீவுகள் மற்றும் வட அமெரிக்கத் தட்டில் அமைந்துள்ள இரண்டு மேற்குத் தீவுகளான புளோரஸ் மற்றும் கோர்வோ என லூசிதானியன் நாடு எனப்படும் போர்த்துக்கல் 3 கண்டங்களுக்கு மேல் பரவியுள்ளது. வடக்கிலிருந்து தெற்கே, மத்திய மற்றும் தெற்கு பகுதியில் தட்டையாக தொடங்கி உயரே மலைப்பகுதிக்கு செல்கிறது. இங்குள்ள பிகோ தீவில் உள்ள 2,351 மீட்டர் உயரமுள்ள இடம் மான்டே பிகோ என அழைக்கப்படுகின்றது. அதே சமயம், இதன் புகழ்வாய்ந்த நிலப்பரப்புப்பகுதி கோயம்ப்ராவுக்கு கிழக்கே உள்ள 1,993 மீட்டர் உயரமுள்ள செர்ரா டா எஸ்ட்ரெலா ஆகும். மிக முக்கியமான மூன்று இஸ்பானிய ஆறுகளான டியூரோ, டேகஸ், குவாடியானா ஆறுகள் போர்த்துக்கல் பகுதியில் முடிவடைகின்றன. லூசித்தானியா நாடு முழுவதுமாக செல்லும் நதிகளில் மொண்டேகோ நதி மிக நீளமான நதியாகும். குவாடியானா ஆற்றின் பாதையில் உள்ள அல்கேவாவின் செயற்கை ஏரிதான் இந்நாட்டின் மிகப்பெரிய நீர்நிலையாகத் திகழ்கின்றது. மிதமான காலநிலை அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நிலவுவதால் நாட்டின் வடக்கில் குளிர்ச்சியாகவும் மழையாகவும், தெற்கில் வெப்பமாகவும் வெயிலாகவும், தென்கோடியில் மிக அதிகமான வறட்சி மற்றும் வெயிலாகவும் காணப்படுகின்றது.
போர்த்துக்கல்லின் தலைநகரம் லிஸ்பன். ஏறக்குறைய 1,04,67,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள போர்த்துக்கல், ஏறக்குறைய 28,71,000 மக்கள் தொகையை லிஸ்பனில் கொண்டுள்ளது. 91,982 சதுர கிமீ மேற்பரப்பையும் கொண்டுள்ள போர்த்துக்கலில் வாழும் மக்களின் அதிகாரப் பூர்வ மொழியாகப் போர்த்துகீசியம் விளங்குகின்றது. வடகிழக்கு போர்த்துக்கல்லில் மிராண்டீஸ் அதிகாரப்பூர்வ மொழியாகவும், பேசப்படும் மொழியாகவும் திகழ்கின்றது. முக்கிய இனக்குழுக்களாக போர்த்துகீசியர்கள் 94.5 விழுக்காடும், பிரேசிலியர்கள் 2 விழுக்காடும், பிரித்தானியர்கள் 0.4 விழுக்காடும் காணப்படுகின்றனர். கத்தோலிக்கர்கள் 88 விழுக்காடும் பிற கிறிஸ்தவ சபை அங்கத்தினர்கள் 3.3 விழுக்காடும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 6.8 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர். குடியரசு ஆட்சி விளங்கும் போர்த்துக்கல்லின் பணமதிப்பு யூரோ ஆகும்.
போர்த்துக்கல் அதன் குறிப்பிட்ட புவியியல் நிலை மற்றும் அதன் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள்தொகை கொண்டதாக இருந்தபோதிலும், பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கல் கொண்டிருந்த கடல் அனுபவத்தைக் கொண்டு தன் காலனி ஆதிக்கத்தை விரிவாக்கியது. இந்த ஆதிக்கம், ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், காலனி நாடுகள் சுதந்திரம் பெற்றதுவரைத் தொடர்ந்தது. காலனி நாடுகள் சுதந்திரம் பெற்றபின்னர், தற்போது நாட்டிற்குச் சொந்தமான தீவுப்பகுதிகளில் அசோர்ஸ் மற்றும் மடிரா தீவுக்கூட்டங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. 1910 முதல் குடியரசு நாடாகத் திகழும் போர்த்துக்கல் 1932 முதல் 1974 வரை எஸ்டாடோ நோவோ என்னும் அமைப்பின் நிறுவனரான அன்டோனியோ டி ஒலிவேரா சலாசர் (1889-1968) மற்றும் அவருக்குப் பின் வந்த மார்செலோ கேடானோ (1968-74) ஆகியோரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது.
1974 ஆம் ஆண்டு சலாசரியானி எதிர்ப்பு இராணுவக் குழுவால் "கார்னேஷன் புரட்சி" என்று அழைக்கப்பட்ட எழுச்சிக்குப்பின், 1974 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு இடையில் அதன் அனைத்து ஆப்ரிக்க காலனிகளுக்கும், அதாவது கினி-பிசாவ், காப்போ வெர்தே, மொசாம்பிக் மற்றும் அங்கோலாவிற்கு சுதந்திரம் வழங்கியது. கிழக்கு திமோரும் சுதந்திரம் பெற்று இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது. இப்போது கிழக்கு திமோர் சுதந்திர நாடாகத் திகழ்கின்றது. மக்காவோ 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று சீனாவுடன் மீண்டும் இணைந்தது. 1976 இல் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்ற சோசலிஸ்ட் கட்சியின் மாரியோ சோரெஸின் அரசில் ஜனநாயகத்திற்கான மாற்றம் நிகழ்ந்தது. பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD) தலைமையிலான வலதுசாரி அரசுகளும், சோசலிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசுகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று நடந்த கடைசித் தேர்தலில் பிரதமர் அந்தோணியோ கோஸ்டா தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். 2021 முதல் இரண்டாவது முறையாக மர்செல்லோ ரிபெல்லோ தி சூசா அவர்கள் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பிலுள்ளார்.
1976ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் பல முறை திருத்தப்பட்டன. குறிப்பாக 1982ஆம் ஆண்டில் இராணுவத்தின் பாதுகாப்பை நீக்குதல் மற்றும் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைத்தல் ஆகியவை குறித்த சட்டங்கள் மாற்றப்பட்டன. 1986ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் இஸ்பெயினுடன் இணைந்து போர்த்துக்கல் ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது, மேலும் 1999ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் நாடுகளில் ஒன்றாக இருந்து, 2002 ஜனவரி 1 ஆம் நாள், 11 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட யூரோ நாணயத்தை நிறுவிய பெருமையைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, நாடு நீண்ட மந்தநிலைக்குள் தள்ளப்பட்டு, ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியது. கடந்த இருபது ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்ட போர்த்துகீசியப் பொருளாதாரம், மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளைப் போலவே கோவிட் -19 பெருந்தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்