போர்த்துக்கல் லிஸ்பனில் துவங்கும் திருத்தூதுப்பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களையொட்டி, அந்நாட்டிற்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்புதனன்று திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லிஸ்பனில் சிறப்பிக்கப்படும் 37வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களையொட்டி அந்நகர் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் எந்த ஒரு வெளிநாட்டுத் திருப்பயணத்தை மேற்கொள்வதற்கும் முன்னரும் முடித்த பின்னரும் உரோம் நகரிலுள்ள மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபிப்பதற்கு இணங்க, இத்திங்கள், ஜூலை 31ஆம் தேதி மாலை அப்பெருங்கோவில் சென்று அன்னை மரியா திருவுருவப் படத்தின் முன் செபித்தார்.
உரோம் உள்ளூர் நேரம் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 7 மணி 50 நிமிடங்களுக்கு பியூமிச்சீனோ விமானத் தளத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை 3மணி நேரம் 10 நிமிடங்கள் பயணம் செய்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைக் கடந்து போர்த்துக்கல் தலைநகரை உள்ளூர் நேரம் 10 மணிக்குச் சென்றடைவார்.
போர்த்துக்கல் அரசுத்தலைவராலும், அரசு அதிகாரிகளாலும் திருஅவைத் தலைவர்களாலும் விமான நிலையத்தில் வரவேற்கப்படும் திருத்தந்தை, அதன்பின் அரசுத்தலைவர் Marcelo Rebelo de Sousa அவர்களை தனியாகச் சந்தித்து உரையாடுவார். அதன்பின் Belémன் கலாச்சார மையத்தில் அரசியல் அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல் தூதுவர்கள் என ஏறக்குறைய 1000 பேரை சந்திக்க உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு தன் முதல் உரையை வழங்கியபின் லிஸ்பனிலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுப்பார்.
மாலை உள்ளூர் நேரம் 4.30 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9 மணிக்கு திருப்பீடத் தூதரகத்தின் முன்னறையில் போர்த்துக்கல் பாராளுமன்ற தலைவர் Augusto Ernesto dos Santos Silva மற்றும் அந்நாட்டு பிரதமர் António Costa ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து உரையாடுவார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி திருத்தந்தையின் போர்த்துக்கல் நாட்டிற்கான முதல் நாள் பயணத்தின்போதே ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருத்துவ பயிற்சி மாணவர்கள் ஆகியோரை சந்தித்து திருவழிபாட்டில் கலந்துகொள்வதும் மறையுரை வழங்குவதும் இடம்பெறும்.
உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களையொட்டி போர்த்துக்கல்லின் லிஸ்பன் செல்லும் திருத்தந்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு நாள் பயணமாக பாத்திமா நகர் மரியன்னை திருத்தலத்தையும் சென்று சந்திப்பார்.
1985ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்தால் உலக இளையோர் ஆண்டு சிறப்பிக்கப்பட்டதையொட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஒவ்வோர் ஆண்டும் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்பட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையின்படி, 1986ல் முதல் உலக இளையோர் தினம் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த மறைமாவட்டத்திலும், அதேவேளை உரோமிலும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாட்டில் ஒரு முன்னறிவிக்கப்பட்ட இடத்திலும் துவக்க காலங்களில் சிறப்பிக்கப்பட்டுவந்த இந்த உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள், 2002ஆம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாடுகளில் என மாறி, தற்போது கோவிட் பெருந்தொற்றின் காரணமாக 2019ஆம் ஆண்டு பானமா நிகழ்வுக்குப்பின், நான்கு ஆண்டுகள் கடந்து போர்த்துக்கல்லில் இடம்பெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்