திருத்தந்தையின் செப்டம்பர் - அக்டோபர் திருவழிபாடு திட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குரிய திருவழிபாடு மற்றும் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் தகவல் தொடர்புத்துறை.
செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி மாலை மங்கோலியாவிலிருந்து திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மாதத்தில் 22 மற்றும் 23 தேதிகளில் தென் பிரான்சில் உள்ள Marseille நகரில் மத்தியதரைக்கடல் பகுதி ஆயர்கள் நடத்திவரும் கூட்டத்தில் பங்கு பெறுவார்.
செப்டம்பர் 22ஆம் தேதி மாலை Marseille மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன் Notre Dame de la Garde பெருங்கோவிலில் மரியன்னை வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 23ஆம் தேதி அங்குள்ள Vélodrome அரங்கில் திருப்பலி நிறைவேற்றுவார்.
செப்டம்பர் 30ஆம் தேதி, காலையில் புதிய கர்தினால்களை நியமிக்கும் திருவழிபாடு, மாலையில் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம், ஆகியவை இடம்பெறும்.
அக்டோபர் 4ஆம் தேதி, புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவன்று, புதிய கர்தினால்களுடன் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி ஆயர் மாமன்றத்தின் பொது அவைக்கூட்டத்தை துவக்கிவைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதே அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி ஆயர் மாமன்றக் கூட்டத்தை நிறைவுச் செய்வார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்