வாழ்க்கையை, அன்பு மற்றும் மகிழ்ச்சியின் கொடையாக மாற்றுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 4, இவ்வெள்ளியன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள Serafina பங்குத்தள மையத்தில் சில பிறரன்பு தொண்டு நிறுவனங்களின் பிரிதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்பான சகோதரர் சகோதரிகளே! உண்மையில், பிறரன்பு பணி என்பது நமது கிறிஸ்தவ பயணத்தின் தோற்றுவாய் மற்றும் குறிக்கோளாக அமைந்துள்ளது. செயல்கள்வழி வெளிப்படும் உங்கள் அன்பின் பிரசன்னம், நாம் என்ன செய்கிறோம் அதை எப்படிச் செய்கிறோம் என்பதன் அர்த்தத்தை நினைவில் நிறுத்த உதவுகிறது. உங்கள் சான்றுபகர்தலுக்கு நன்றி. இப்போது, நீங்கள் பகர்ந்துள்ள சான்றுகளின் அடிப்படையில் மூன்று கண்ணோட்டங்களை நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்:
01. ஒன்றிணைந்து நன்மை செய்தல்
'ஒன்றிணைந்து' என்பது மிகவும் முக்கியமான வார்த்தையாக இருக்கின்றது. இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், நலமுடையவர்கள் மற்றும் நோயாளர்கள் என அனைவருடனும் ஒன்றாக வாழ்வது, அவர்களுக்கு உதவுவது மற்றும் அவர்களை அன்புகூர்வது என்பது இதன் உள்ளார்ந்த அர்த்தமாக அமைகின்றது.
நான் ஒரு நோயாளர், அல்லது எனக்கு இதைச் செய்வது கடினம் என்ற சொற்களால் நம்மையே நாம் வரையறுக்க அனுமதிக்கக் கூடாது, ஏனென்றால் நம்மில் எவரும் அப்படி இல்லை. கிறிஸ்தவ மற்றும் மனித சமூகத்திற்காக நாம் ஒவ்வொருவரும் கடவுளின் தனித்துவமான, விலைமதிப்பற்ற மற்றும் புனிதமான கொடையாக விளங்குகின்றோம். இவ்விதத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மை நாமே வளப்படுத்திக்கொள்வோம். மேலும் நாம் இருக்கும் நிலையிலேயே ஒவ்வொருவரும் நம்மை வளப்படுத்துவார்களாக!
02. திட்டவட்டமாகச் செயல்படுதல்
இரண்டாவதாக, திட்டவட்டமாகச் செயல்படுவது. இதுவும் இன்றியமையாத ஒன்றுதான். நாம் பொருள்களைப் பற்றி குறைசொல்வதிலேயே நேரத்தை வீணாக்காமல், மக்களின் உறுதியான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மகிழ்ச்சியுடனும், கடவுளின் நம்பிக்கையுடனும் செயல்பட்டால், வியக்கத்தக்க காரியங்கள் நிகழ முடியும்.
ஆகவே, இளகிய மனதுடனும், இரக்க உணர்வுடனும், சவால்களை ஏற்றுக்கொண்டு, தேவையில் இருப்போருக்கு உறுதியான வழிகளில், படைப்பாற்றல் மற்றும் துணிவு கொண்டு உங்கள் பணிகளைத் தொடர்ந்திடுங்கள்.
03. வலுவற்றவர்களுடன் உடனிருத்தல்
மிகவும் வலுவற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது மூன்றாவது கண்ணோட்டமாக அமைகின்றது. நாம் அனைவரும் பலவீனத்துடனும், தேவையுடனும் இருக்கும்போதுதான், நற்செய்தியின் இரக்கக் கண்ணோட்டம் மிகவும் வலுகுறைந்தவர்களின் தேவைகளைக் கண்ணோக்க நம்மை அழைக்கிறது.
இதுவே, கடவுளால் மிகவும் அன்புகூரப்படும் மக்களான ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், புறந்தள்ளப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும், வலுகுறைந்தவர்களுக்கும், பாதுகாப்பற்றவர்களுக்கும் (காண். 2 கொரி 8:9) நம்மை பணியாற்றத் தூண்டுகிறது.
இவர்கள்தாம் திருஅவையின் உண்மையான கருவூலமாகவும் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்களாகவும் திகழ்கின்றனர். சக குடிமக்கள் அல்லது வெளிநாட்டவர்கள், ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள், வலுகுறைந்தவர்கள் அல்லது வயதானவர்கள், விரும்பத்தக்கவர்கள் அல்லது விரும்பத்தகாதவர்கள் ஆகியோர் கிறிஸ்தவர்களாகிய நமது வீட்டுக் கதவைத் தட்டும்போது, அவர்கள்மீது நமது தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்த முடியாது என்பதால், அவர்களிடையே வேறுபாடு காட்டக் கூடாது என்பதையும் நமது நினைவில் கொள்வோம்.
இந்த வழியில் நமது அன்புகூர்த்தலைத் தொடர்வோம். தயவுகூர்ந்து உங்கள் வாழ்வை அன்பு மற்றும் மகிழ்ச்சியின் கொடையாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் இறையாசீர்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்