உரோம் அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அருள்பணியாளர்கள் தங்களின் தனிப்பட்ட மகிமைக்காக பணியாற்றுவதை கைவிட்டு இறைவனின் மகிமைக்காக பணியாற்றவேண்டும் எனவும், அவர்களின் இன்ப துன்ப வேளைகளில் தான் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவு நாள் கொண்டாட்டங்களையொட்டி, ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கையெழுத்திட்டு, 7ஆம் தேதி திங்களன்று, உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைவானதாக இருக்கும், அதேவேளை, பலவேளைகளில் மிகச்சிறிய அளவிலேயே அங்கீகாரம் பெற்றிருக்கும் அருள்பணியாளர்களின் சேவைகளின்போது இன்ப துன்பங்களில் அவர்களுடன் இருப்பதாக அதில் உறுதி கூறியுள்ளார்.
ஒன்றிணைந்த திருஅவையின் பாதையில் திருஅவை சகோதரர் சகோதரிகளுடன் இணைந்து நடந்து, எஜமானர்களாக அல்ல, மாறாக பணியாளர்களாக செயல்படவேண்டும் என தன் செய்தியில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களின் பாதங்களைக் கழுவுபவர்களாக செயல்படவேண்டுமேயொழிய மற்றவர்களைக் காலில் இட்டு நசுக்குபவர்களாக அருள்பணியாளர்கள் ஒருபோதும் செயல்படக்கூடாது என கேட்டு்ள்ளார்.
ஓர் ஆயருக்குரிய பாசத்துடனும், ஒரு தந்தைக்குரிய அக்கறையுடனும் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம், 7 பக்க நீளமுடையதாக, அருள்பணியாளர்களின் இன்ப துன்ப வேளைகளில் திருத்தந்தையின் நெருக்கத்திற்கு உறுதி கூறுவதாக உள்ளது.
உலகப்போக்குகளிலும், குருத்துவமே உயர் பதவி என்ற மனநிலையிலும் தங்களை இழந்து உலகப்போக்குகளுக்கு தங்களில் முக்கியத்துவம் கொடுக்கும் சோதனைகளை ஒழித்தளிக்க வேண்டும் என கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் உயர்ந்தவர்கள், சிறப்புச் சலுகைப் பெற்றவர்கள், மற்றவர்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளவர்கள் என்ற எண்ணத்தை நாம் விதைக்கும்போது, நாம் மக்களிடம் இருந்து விலகிச் செல்கிறோம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவம் அதிகாரத்திற்குரியது என நாம் எண்ணும்போது, ஆணவம், தற்பெருமை நம்மில் புகுந்து மக்களுக்கு எதிராகச் செல்லும் நிலை உருவாகிறது என மேலும் அக்கடிதச் செய்தியில் கூறியுள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்