தேடுதல்

உக்ரைன் நாட்டுக் கொடியுடன் இராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டுக் கொடியுடன் இராணுவ வீரர்கள் 

சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் உக்ரைனுக்காக இறைவேண்டல்

1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரம் பெற்ற உக்ரைன் நாடு, இவ்வியாழனன்று தன் சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆகஸ்ட் 24ஆம் தேதி தன் சுதந்திர நாளைக் கொண்டாடும் அதேவேளை, வெளிநாட்டு தாக்குதல்களால் பெருந்துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் நாட்டிற்காக தொடர்ந்து செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதன்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியிலும், உக்ரைன் நாட்டிற்காக ஜெபிக்குமாறு மீண்டுமொருமுறை விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர் என்பது மிகக் கொடூரமானது, எண்ணற்ற குழந்தைகள் காணாமல்போயுள்ளனர், எண்ணற்றோர் இறந்துள்ளனர் என்ற நிலையில் இந்த துயருறும் நாட்டை மறந்துவிடவேண்டாம், அந்த மக்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம் என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், போர் மற்றும் மோதல்களால் துன்புறும் மக்கள், காணாமல் போன குழந்தைகள், இப்போரினால் உயிரிழந்தவர்கள் ஆகியோரை தன் ஆகஸ்ட் 23, புதன் பொதுமறைபோதகத்தின் இறுதியில் நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வியாழக்கிழமையன்று திருஅவை சிறப்பிக்க உள்ள தூய பர்த்தலெமேயுவின் திருவிழாவை நினைவூட்டி, அப்புனிதரின் பரிந்துரையை நாடி அவரிடத்தில் உக்ரைன் நாட்டை ஒப்படைத்து செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார். 

1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரம் பெற்ற உக்ரைன் நாடு, இவ்வியாழனன்று தன் சுதந்திர தினத்தை, இரஷ்யாவின் தாக்குதல்களுக்கும், போர் இடிபாடுகளுக்கும் இடையே சிறப்பிக்கின்றது.

இந்த சுதந்திர நாளில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2023, 14:39