புதன் மறைக்கல்வி உரை - வடஅமெரிக்கப் புனிதரான கத்தேரி டெகக்விதா
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 31, புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில், வத்திக்கான், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, அப்போஸ்தலிக்கப் பேரார்வம் - நற்செய்தி அறிவிப்பு என்ற தலைப்பின் 19 ஆவது பகுதியாக வடஅமெரிக்காவின் முதல் புனிதரான புனித கத்தேரி டெகக்விதா என்பவர் பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கம் முழுதும் திருப்பயணிகளால் நிறைந்திருக்க உள்ளே வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து தனது மறைக்கல்வி உரைக்கானக் கூட்டத்தினைத் துவக்கி வைத்தார். அதன்பின் திருத்தூதர் புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடல் 5ஆம் அதிகாரத்தில், பொதுஉரைகள் 6 என்னும் தலைப்பின்கீழ் உள்ள 15 முதல் 18 வரையிலான இறைவார்த்தைகள் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டன.
1 தெசலோனிக்கர் 5; 15- 18
எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள். எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே
அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரையினைக் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் மறைக்கல்வி உரை
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
அப்போஸ்தலிக்க பேரார்வம் மற்றும் நற்செய்தி அறிவிப்பிற்கான ஆர்வம் தொடர்பான நமது தொடர் மறைக்கல்வியில் இன்று வட அமெரிக்கப் பெண்மணியான புனித கத்தேரி டெகக்விதாவைப் பற்றிக் காண்போம். 1656 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த கத்தேரி, திருமுழுக்கு அருளடையாளம் பெறாதவரும் மொஹாக்கின் தலைவருமானவருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாய் அல்கோன்கினா கிறிஸ்தவத்தை சார்ந்தவர். கத்தேரி தன் தாயிடமிருந்து தான், கடவுளைப் புகழ்ந்து பாடல்களைப் பாடவும் செபிக்கவும் கற்றுக் கொண்டார். குடும்ப சூழலில் குறிப்பாக நம் அன்னையர்கள் மற்றும் பாட்டிகளிடமிருந்தே கடவுளின் நற்செய்தி முதன்முறையாகப் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்படுகின்றது. எளிமையான, சிறிய செயல்களுடன் கூடிய செபத்தில் கடவுளிடம் குழந்தைகள் எப்படிப்பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ள பெற்றோர்கள் உதவுகிறார்கள். கடவுளுடைய அளவற்ற இரக்கமுள்ள அன்பை பிள்ளைகளிடம் எடுத்துக் கூறுகிறார்கள். புனித கத்தேரிக்கும் ஏன் நம்மில் பெரும்பான்மையினருக்கும் இறைநம்பிக்கையின் அடித்தளம் இப்படித்தான் போடப்பட்டது.
கத்தேரிக்கு நான்கு வயதாக இருந்தபோது, கடுமையான பெரியம்மை தொற்றுநோய் அவரது குடும்பத்தைத் தாக்கியது. அதில் அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் இறந்துவிட்டனர். இந்த தொற்றினால் கத்தேரிக்கு முகத்தில் வடுக்களும் பார்வை குறைபாட்டு பிரச்சனைகளும் இருந்தன. அந்நேரத்தில் இருந்து கத்தேரி பல சிரமங்களைச் சந்தித்தார். பெரியம்மையின் தாக்கத்தால் உடல் ரீதியான பிரச்சனைகளும், 1676 ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று திருமுழுக்கு அருளடையாளம் பெற்றதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த மரண அச்சுறுத்தல்கள் துன்புறுத்தல்களும் ஏராளம்.
தான் அடைந்த அத்தனை இன்னல்களையும் இயேசுவேத் தனக்குக் கொடுப்பதாக ஏற்றார் கத்தேரி. சிலுவையின் மீது மிகுந்த அன்புகொண்ட கத்தேரி, கிறிஸ்து தன் அன்பின் உறுதியான அடையாளமாக, நமக்காக இறுதிவரை தன்னையேக் கொடுத்தார் என்பதை உணர்ந்தார். இனிமையானதைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமன்று, நமது அன்றாட சிலுவைகளை பொறுமை, மற்றும் நம்பிக்கையுடன் எப்படி எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி அறிந்திருப்பதும் தான் நற்செய்திக்கு சான்று பகரும் வாழ்வாகும். வாழ்வதிலும் நற்செய்தியை அறிவிப்பதிலும் சிரமங்களை நாம் சந்திக்கும்போது, மனச்சோர்வடைதல், ஆறுதல் தேடி தஞ்சமடைதல், நம்மைப் போல் சிந்திக்கும் சிறு குழுக்களுடன் இணைந்து தனியாக விலகுதல் போன்றவற்றினை செய்ய நாம் தூண்டப்படலாம். நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடனும் கிறிஸ்தவ வாழ்க்கைப் பாதையில் நாம் தொடரத் தேவையான இரக்கத்தையும் அருளையும் தரும் இயேசுவிடம் நம் இதயத்தைத் திறந்தால் ஒவ்வொரு சவாலையும் நம்மால் சமாளிக்க முடியும் என்பதை புனித கத்தேரி டெகக்விதாவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகின்றது.
திருமுழுக்குப் பெற்ற பின்னர், புனித கத்தேரி, மொண்ட்ரீயல் நகருக்கு அருகில் உள்ள இயேசு சபையினரின் மறைப்பணி இல்லத்தில் சேர்ந்தார். தினமும் காலையில் திருப்பலி, திருநற்கருணை வழிபாடு, ஜெபமாலை ஜெபித்தல், தவ வாழ்க்கை வாழ்தல் போன்றவற்றில் தனது நாளை செலவிட்டார். அவரது இந்த ஆன்மிக நடைமுறைகள் அவ்வில்லத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தன; கடவுள் மீது அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பினால் அனைவரையும் ஈர்க்கும் ஒரு புனிதத்தன்மையை கத்தேரியில் அனைவரும் கண்டார்கள். இல்லத்தில் இருக்கும் சிறாருக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்தல் அவர்களோடு செபித்தல், முதியோர் மற்றும் நோயாளிகளை பராமரித்தல் போன்ற பொறுப்புக்களைத் திறம்பட ஆற்றினார்.
கடவுள், வயதில் மூத்தோர், அண்டை வீட்டார் போன்றோருக்குப் பணிவான மற்றும் அன்பான சேவைக்கு முன்மாதிரியாக இருங்கள். நமது சகோதர சகோதரிகள், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு, பொருளளவிலும், ஆன்மிக அளவிலும், எளிய மற்றும் அன்றாட இரக்கப் பணிகளைச் செய்வதற்கான அர்ப்பணிப்பில் நம்மை வளர்த்துக்கொள்வோம். இத்தகைய பணிகள் இறைவனுடனான ஒரு முக்கிய உறவுக்கானப் பலனைத் தருகிறது என்பதற்கு புனித கத்தேரியின் வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.
திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டாலும், கத்தேரி தன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணிக்க விரும்பி துறவு ஏற்றார். இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கத்தேரி போன்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் கடவுளால் ஒப்படைக்கப்பட்ட பணிக்கு பிளவுபடாத இதயத்துடன் பணியாற்ற தங்களையே அர்ப்பணிக்க ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறார்கள். நம்பிக்கை எப்போதும் பணியில் வெளிப்படுத்தப்படுகிறது. நம்பிக்கை என்பது தன்னை, ஆன்மாவை உருவாக்குவது அல்ல: மாறாக அது பணியாற்ற நம்மை உந்தித்தள்ளுவது. நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ வாழ்க்கையின் தூய்மைத்தனத்திற்கு அழைக்கப்படுகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் இந்த அழைப்பு உள்ளது: இந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்வோம். கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்.
அன்பான சகோதர சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பேரார்வம் என்பது, செபம் மற்றும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களினால், ஊட்டமளிக்கும் இயேசுவுடன் ஒன்றிப்பையும். நமக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நம்பிக்கையுடன் இருந்து கிறிஸ்தவ செய்தியின் அழகைப் பரப்புவதற்கான விருப்பத்தையும் குறிக்கிறது. இதற்கு புனித கத்தேரியின் வாழ்க்கை ஒரு சான்று. நற்செய்திக்குத் தன் வாழ்வால் சான்று பகர்ந்த புனித கத்தேரி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுதந்திரமான வாழ்க்கையினால் இறைவனுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் மகிழ்வுடன் பணியாற்றினார். 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17, அன்று தனது 24வது வயதில் இறப்பதற்கு முன்பு வரை தனது அழைப்பை எளிமையாக நிறைவேற்றி, கடவுளை அன்பு செய்து, புகழ்ந்து வாழ்ந்தார். தன்னுடன் வாழ்ந்தவர்களுக்கும் அவ்வாறே செய்யக் கற்றுக் கொடுத்த அவரின் இறுதி "இயேசுவே, நான் உன்னை அன்ன்பு செய்கின்றேன்" என்பதாகும்.
ஆகவே, புனித கத்தேரி டெகக்விதா போல நாமும் இறைவனிடமிருந்து பலத்தைப் பெற்று, சாதாரண செயல்களை அசாதாரணமான முறையில் செய்யக் கற்றுக்கொள்வோம். இதனால் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையிலும், அன்பிலும், கிறிஸ்துவின் பாடுகளுக்கான சாட்சிய வாழ்விலும் வளரக் கற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு தனது புதன் மறைக்கல்வி உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்