போர்த்துக்கல் மூன்றாம் நாள் பயண நிகழ்வுகள்

வாஸ்கோட கமா பெயரிலான பொதுத் தோட்டம் இம்பேரியல் சதுக்கம் அருகில் அமைந்துள்ளது. 1940ஆம் ஆண்டு போர்த்துகீசிய உலக கண்காட்சியின் போது கட்டப்பட்ட இச்சதுக்கமானது, போர்த்துக்கல் நாட்டின் வரலாற்றைப் போற்றும் விதமாக உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 8 கிமீ தூரம் தொலைவில் உள்ள வாஸ்கோட கமா தோட்டத்தை நோக்கிச் சென்றார்.                   

வாஸ்கோட கமா பெயரிலான பொதுத் தோட்டம் இம்பேரியல் சதுக்கம் அருகில் அமைந்துள்ளது. 1940ஆம் ஆண்டு போர்த்துகீசிய உலக கண்காட்சியின் போது கட்டப்பட்ட இச்சதுக்கமானது, போர்த்துக்கல் நாட்டின் வரலாற்றைப் போற்றும் விதமாக உள்ளது. ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள இந்த மிகப்பெரிய சதுக்கம், மோஸ்திரோ தோஸ் ஜெரோனிமோஸ் மற்றும் பெலெம் கலாச்சார மையம் அருகே அமைந்துள்ளது. தோட்டத்தின் நடுவில் உள்ள பெரிய ஒளிரும் நீரூற்று பாதைகளை ஒன்றிணைக்கும் மையமாக உள்ளது. இச்சதுக்கத்தின் தென்கோடியில் உள்ள இந்திய நடைவீதியில் அன்டோனியோ டுவார்த்தே என்னும் சிற்பியால் வடிவமைக்கப்பட்ட இரண்டு கடல் குதிரைகள் உள்ளன. 

லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இந்திய இலங்கை நேரம் 1.30 மணிக்கு வாஸ்கோடகமா தோட்டப்பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோருக்கான ஒப்புரவு வழிபாட்டில் பங்கேற்று இளையோர் சிலருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கினார் திருத்தந்தை. அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு 8.7 கிமீ தொலைவில் உள்ள வின்சென்ட் தெ பால் சமூக மையத்தை வந்தடைந்தார்.

வின்சென்ட் தே பால் சமூக மையம்

ஆலயம் மற்றும் வின்சென்ட் தே பால் பங்குதள சமூக மையத்தைக் கொண்ட இடம், செராபினோ வட்டத்தின் புறப்பகுதியில் பிரச்சனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, சிறார் மற்றும் இளையோர் பொழுதுபோக்குபகுதி, முழுநேர மற்றும் பகுதி நேர முதியோர் இல்லம், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் இல்லம் என 170 ஊழியர்கள் பணியாற்றும் பலவிதமான செயல்பாடுகள் நடைபெறும் இடமாகத் திகழ்கின்றது. இங்குள்ள பங்கு ஆலயமானது 1959ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் முதுபெரும்தந்தை கர்தினால் டோம் மானுவல் கோன்சால்வஸ் செரஹெய்ராவால் (Dom Manuel Gonçalves Cerejeira) நிறுவப்பட்டு, கொன்சலாத்தா மறைப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்குஆலயத்தின் நிறுவனரும் முதல் பங்குத்தந்தையுமாக அச்சபையின் மண்டலத்தலைவர் அருள்பணியாளர் ஹோஸே கல்லேயா பணியாற்றினார். அருள்பணியாளரின் வெளிப்படையான விருப்பத்தின் பேரில், புனித வின்சென்ட் தே பவுலின்  உத்வேகமுள்ள செயல்பாடுகளைப் பின்பற்றும் வகையில், "ஏழைகளில் கடவுளை நேசிப்பது" என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது.  இனம், மதம், நிறம் சமூக வர்க்க வேறுபாடு இன்றி உடன் வாழும் சகோதரர்களுக்கு பணியாற்றுவதில் கடவுளின் அன்பின் அடையாளமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுச் செயல்படுகின்றது இச்சமூக மையம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2023, 12:41