இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் பூங்காவில் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 3 வியாழன் போர்த்துக்கல் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் காலை போர்த்துக்கல் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு, Scholas Occurrentes இல்ல இளையோர் சந்திப்பு என இரு இடங்களில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் திருப்பீடத்தூதரகம் வந்து மதிய உணவு எடுத்து இளைப்பாறிய திருத்தந்தை, லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 4.45 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.15 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் இருந்து கிளம்பி இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் அவர்களின் பெயரிலான பூங்காவில் இளையோரைச் சந்திக்கச் சென்றார். திருப்பீடத்தூதரகம், பூங்கா இரண்டிற்கும் இடையிலான 600 மீட்டர் தூரத்தை திறந்த வாகனத்தில் அமர்ந்து இளையோரிடையே வலம்வந்தார்.
இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் பூங்கா போர்த்துக்கலின் லிஸ்பனில் உள்ள ஒரு பொது பூங்காவாகும். லிஸ்பன் நகரத்தின் மையத்திலும் அவெனிதா தா லிபர்தே மற்றும் பொம்பலின் மார்க்விஸ் சதுக்கத்திற்கு வடக்கே 25 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது இப்பூங்கா. இங்கிருந்து நகரத்தின் அழகையும் மலைகள் சூழந்த அதன் நிலப்பரப்பையும் துல்லியமாகக் காணமுடிகின்றது. 1903ஆம் ஆண்டு தலைநகருக்கு இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் வந்ததன் நினைவாக அவர் பெயரால் இப்பூங்கா அழைக்கப்படலாயிற்று. 1945இல் கட்டிடக் கலைஞர் கெய்ல் தோ அமரால் வடிவமைக்கப்பட்ட சில தோட்டங்களும் இங்கு உள்ளன. 1932ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாவில்ஹாவோ தோஸ் தெஸ்போர்தோஸ் என்ற அரங்கு தற்போது போர்த்துக்கீசிய தடகள வீரரின் நினைவாக பவில்ஹாவோ கார்லோஸ் லோபஸ் என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான தாவரங்களைக் கொண்ட Estufa Fria பசுமை இல்லம், செயற்கை குளங்கள், சிறந்த கலை மதிப்புள்ள அற்புதமான சிலைகள், உலகின் மிகப்பெரிய போர்த்துகீசிய கொடி போன்றவற்றை இப்பூங்கா உள்ளடக்கியுள்ளது. மேலும் சிறார் விளையாட்டு பகுதி, சுற்றுலா பகுதி, கேளிக்கைப் பகுதி, டென்னிஸ் எனப்படும் வரிப்பந்து பகுதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், உணவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இப்பூங்காவில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் ஆங்கிலோ-போர்த்துகீசிய கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தவும் 1903 ஆம் ஆண்டில் போர்த்துக்கலுக்கு வருகை தந்த இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் பெயரால் அழைக்கப்படும் இப்பூங்கா அவரது வருகைக்கு முன் வரை விடுதலை பூங்கா (லிபர்ட்டி பார்க்) என்று அழைக்கப்பட்டு வந்தது. தி கிரேட் கேம்ப்ளர் என்ற இந்தியத் திரைப்படத்தின் "பெஹ்லே பெஹ்லே பியார் கி முலகாதே" பாடல் இங்கு படமாக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்