திருத்தூதுப்பயண நிறைவில் அன்னை மரியாவிற்கு நன்றி
மெரினா ராஜ் - வத்திக்கான்
உரோம் உள்ளூர் நேரம் இரவு 9.40 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1.10 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை, அங்கிருந்து தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தை வந்தடைந்தார். இத்துடன் திருத்தந்தையின் 42ஆவது போர்த்துக்கல் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.
எந்த ஒரு வெளிநாட்டுத் திருப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னரும் முடித்த பின்னரும் உரோம் நகரிலுள்ள மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை போர்த்துக்கல் திருப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அதாவது ஜூலை 31ஆம் தேதி மாலை அப்பெருங்கோவில் சென்று அன்னை மரியா திருவுருவப் படத்தின் முன் செபித்தார். அதேபோல் ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9.40 மணிக்கு தனது 42ஆவது திருத்தூதுப்பயணத்தை நிறைவுசெய்த திருத்தந்தை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 7 திங்கள் கிழமை காலை உரோம் மேரி மேஜர் ஆலயம் சென்று அன்னை மரியாவிற்கு தன் நன்றியினைத் தெரிவித்தார். தனது தலைமைத்துவப் பணியின் பத்தாண்டுகளில் திருத்தந்தை மேரி மேஜர் ஆலயம் செல்வது 110 ஆவது முறையாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்