தேடுதல்

உரோம் நோக்கிப் புறப்படுகையில் திருத்தந்தை உரோம் நோக்கிப் புறப்படுகையில் திருத்தந்தை   (ANSA)

சிறார் மீதான பாலியல் முறைகேடுகள் குறித்து திருத்தந்தை கருத்து

முறைகேடுகள் அனைத்தும் மிகவும் தீமையானவை என்பதை மனிதகுலம் மதிப்பாய்வு செய்து மாற்ற வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

சிறார் முறைகேடு என்பது உலகில் நடக்கும் துன்பங்களில் மிகவும் கொடுமையானது என்றும், பாதிக்கப்பட்டவர்களை நேரலையில் படம்பிடித்து உலகிற்குக் காட்டுவது அவர்களை மேலும் வதைப்பதற்கு சமம் என்றும் கூறினார் திருத்தந்தை. குழந்தைத் தொழிலாளர் முறைகேடு, குழந்தைகளுடன் பணிபுரிபவர்களால் பெரும்பாலும் ஏற்படுகின்றது  என்றும், பெண்கள் மீதான முறைகேடுகள் இன்றும் பல நாடுகளில் நடைபெறுகின்றது என்றும் வருத்தத்துடன் கூறினார். முறைகேடுகள் அனைத்தும் மிகவும் தீமையானவை என்பதை மனிதகுலம் மதிப்பாய்வு செய்து மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் பகிர்ந்துகொண்டார்.

தனது உடல் நிலை நன்றாக உள்ளது என்றும் இளையோரிடம் பேசுகையில் அவர்களின் எதிர்பார்ப்பு, கவனம் அறிந்து தனது திருப்பயண உரைகள் சிலவற்றை உரையாடலாக மாற்றியதாகவும் கூறிய திருத்தந்தை, மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் சுரண்டப்படுவது தனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என்றும், மத்திய தரைக்கடல் ஒரு மயானம் அதைவிட வட ஆப்ரிக்கா புலம்பெயர்ந்தோர்க்கான மிக்பெரிய மயானம் இதுகுறித்து பேசுவதற்காகவே தான் பிரான்சின் மார்சேல்ஸ் செல்வதாகவும் கூறினார்.   

திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது என்று லிஸ்பனில் திருத்தந்தை எடுத்துரைத்ததை நினைவுகூர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள், வாய்ப்புகள் இல்லை, உதாரணமாக பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைத்துச் சடங்குகளையும், அருளடையாளங்களையும் பெற முடியாத முரண்பட்ட நிலை பற்றி விளக்குமாறு கேட்டார்.

திருஅவையில் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் கடவுளைச் சந்திக்கிறார்கள், தாயாம் திருஅவை அவர்களை வழிநடத்துகிறது என்று கூறிய திருத்தந்தை, மேய்ப்புப்பணியில் மக்களாம் மந்தையை முன்னோக்கி கொண்டு வருவதற்கான வழி மற்றும் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று பொறுமை என்றும் கூறினார். தற்கொலை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மனவேதனை, மனச்சோர்வு உள்ள இளைஞர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், பட்டம், வேலை, உறவு போன்றவற்றை சரியாக அடையமுடியாத விரக்தியில் அவமானத்தில் தற்கொலை எண்ணம் இளையோரிடத்தில் ஏற்படுகின்றது என்றும் கூறினார், இறுதியாக இறைவன் எப்பொழுதும் நமக்காக காத்திருக்கிறார், ஏனென்றால் அவர் இரக்கமுள்ளவர் தந்தையின் கருணை எல்லாவற்றையும் தாண்டியது என்றும் உலக இளையோர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சென்ற அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை.

ஏறக்குறைய 3 மணி நேர இப்பயணத்தில் தான் கடக்க இருக்கும் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு தந்திச்செய்தியினையும் அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2023, 12:20