போர்த்துகல் இரண்டாம் நாள் திருப்பயண நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மத்திய லிஸ்பனில் உள்ள பால்மா டி சிமா வளாகத்தில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய பல்கலைக்கழகமானது 1967ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆயர் பேரவையின் வேண்டுகோளின் பேரில் திருப்பீடத்தின் அனுமதியுடன் கட்டப்பட்டது. 1971ஆம் ஆண்டு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, அரசால் நிறுவப்படாத முதல் நவீன போர்த்துகீசிய பல்கலைக்கழகமாகும். இது போர்த்துகீசிய அரசு மற்றும் திருப்பீடத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. பல துறைகளை உள்ளடக்கிய உயர்கல்வி நிறுவனமாக, மாணவர்களின் தகுதிவாய்ந்த கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. கிறிஸ்தவ மனிதநேயத்தின் கொள்கைகள் முதல் பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரமான சிந்தனையை மாணவர்களிடத்தில் வளர்க்கின்றது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி, மாணவர் பயிற்சி மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. போர்த்துகலில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் ஆறாவது உயர் முதல்வர், பேராசிரியர் இசபெல் கேப்லோவா கில் ஆவார்.
லிஸ்பன் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இந்திய இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு பல்கலைக்கழகம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கலைக்கழக முதல்வரால் வரவேற்கப்பட்டார். அங்கு ஏறக்குறைய 6,500 மாணவர்கள் திருத்தந்தையுடனான சந்திப்புக்குக் குழுமியிருந்தனர். இசை முழக்கத்துடன் பல்கலைக்கழகத்திற்குள் வரவேற்கப்பட்ட திருத்தந்தை அவர்களை பல்கலைக்கழக முதல்வர் முதலில் வரவேற்று உரையாற்றினார். திருத்தந்தையின் லௌதாத்தோ சி திருமடல், உலகளாவிய கல்வி ஒப்பந்தம், பிரான்சிஸ்கோ பொருளாதாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் மற்றும் திருத்தந்தையின் நிதி உதவியால் பயன்பெறும் இளம்பெண் போன்றோர் தங்களது சான்று வாழ்வினைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர்.அவர்களின் பகிர்விற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரண்டாம் நாளின் முதல் உரையான திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் உரையை ஆற்றினார். திருத்தந்தையின் உரைச் சுருக்கத்தினை இப்போது கேட்கலாம்.
இவ்வாறு தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவரோடும் இணைந்து விண்ணகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே என்ற செபத்தை செபித்து அதன் முடிவில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
பல்கலைகழகத்திலிருந்து வெளியேறும் முன் புதிதாக கட்டப்பட இருக்கும் காம்போஸ் வெரித்தாதிஸ் (Campus Veritatis) என்னும் இடத்தின் முதல் கல்லை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்