அன்னை மரியா பெயர் கொண்ட துறவு இல்லம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கப்பல் மாலுமிகளின் பாதுகாவலரான புனித ஜெரோனிமோவின் கட்டளையின் பெயரில் உருவாக்கப்பட்ட பெலேமின் அன்னை மரியா துறவு இல்லமானது, தற்போது அரசின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் இடமாக உள்ளது. முன்னாள் துறவு இல்லமான இக்கட்டிடம் மோஸ்திரோ டோஸ் ஜெரோனிமோஸ் என்று அழைக்கப்படுகிறது, கட்டிடக் கலைஞர் டியோகோ பொய்டாகா என்பவரின் வடிவமைப்பின்படி அரசர் முதலாம் மானுவல் என்பவரால் கட்டப்பட்டது. போர்த்துகீசிய கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகத் திகழும் இக்கட்டிடமானது, 1907ஆம் ஆண்டு முதல் தேசிய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டு, 1983ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலிலும் இடம்பெற்றது. நாட்டின் சமூக வாழ்வோடு பின்னிப் பிணையப்பட்டு, நாட்டுத் தலைவர்களைப் போர்த்துகீசிய முறைப்படி வரவேற்க இது பயன்படுத்தப்படுகிறது. 1498ல் இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடித்த வாஸ்கோட கமா அவர்களோடு மிக நெருங்கிய தொடர்புடையது இந்த துறவு இல்லம்.
லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு இந்திய இலங்கை நேரம் இரவு 10 மணிக்கு போர்த்துக்கல் நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள் திருத்தொண்டர்கள், இருபால் துறவிகள், மேய்ப்புப்பணியாளர்கள் ஆகியோரை Mosteiro dos Jerónimos துறவு இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லிஸ்பனின் முதுபெரும்தந்தை, கர்தினால் மானுவேல் கிளமெண்ட், போர்த்துக்கல் ஆயர் பேரவைத்தலைவரான Leiria-Fatima மறைமாவட்ட ஆயர் José Ornelas Carvalho, ஆயர் பேரவையின் துணைச்செயலரான Coimbra மறைமாவட்ட ஆயர் Virgílio do Nascimento Antunes ஆயர் பேரவைச் செயலர் அருள்பணி Manuel Joaquim Gomes Barbosa மற்றும், பங்குத்தந்தையர்கள் திருத்தந்தையை வரவேற்றனர்.
அங்குக் கூடியிருந்த அனைவரையும் புனித நீர் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இரண்டு சிறார் திருத்தந்தையை மலர்களைக் கொடுத்து வரவேற்க அதன்பின் திருத்தந்தை, பீடத்தை நோக்கிச் சென்றார். போர்த்துக்கல் ஆயர் பேரவைத்தலைவரான ஆயர் José Ornelas Carvalho அவர்கள் திருத்தந்தையை வரவேற்க, அதன்பின் மாலைநேர செபவழிபாடானது திருப்புகழ்பாடல்களுடன் ஆரம்பமானது. திமோத்தேயுவிற்கு எழுதிய இரண்டாவது திருமடல் 1ஆம் அதிகாரம் 7 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை தனது உரையைத் துவக்கினார். போர்த்துக்கல் திருத்தூதுப்பயணத்தின் முதல் நாள் நிகழ்வில் தனது இரண்டாவது உரையை போர்த்துக்கல் நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள் திருத்தொண்டர்கள், இருபால் துறவிகள், மற்றும் மேய்ப்புப்பணியாளர்களுக்காக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் உரைச்சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.
இவ்வாறு தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை, கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். அதன்பின் அங்கிருந்து 9.9 கிமீ காரில் பயணித்து மீண்டும் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 6.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11.15 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்துசேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரவு உணவுக்குப்பின் நித்திரைக்குச் சென்றார்.
காலையில் அரசுத்தலைவர், பாராளுமன்றத் தலைவர், பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மாலையில் போர்த்துக்கல் நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருடன் இணைந்து மாலை வழிபாட்டில் கலந்து கொண்டு தனது 42ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளை இனிதே நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்