ஐரோப்பா, உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்பட்டும்! : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 2, இப்புதனன்று போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். உங்களின் இந்த அன்பான வரவேற்பிற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். பல்வேறு மக்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தச் சந்திப்பு நகரமான லிஸ்பனுக்கு வந்ததில் நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன்.
பரந்துவிரிந்த இந்தக் கடலைப் பார்க்கும்போது, போர்த்துகீசிய மக்கள் ஆன்மாவின் மகத்தான எல்லைகளையும் இந்த உலகில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தையும் எதிரொலிக்கிறார்கள் என்பதை உணரும்விதமாக அக்கடலால் ஈர்க்கப்பட்ட நானும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உரையாடலுக்கான பாதையாக லிஸ்பன்
ஒரு கடல் நகரமாக விளங்கும் லிஸ்பன், எல்லைகளைப் பிரிக்கும் இடமாக அல்ல, மாறாக, அவைகளை ஒன்றிணைத்து தொடர்புபடுத்தும் இடமாக அமைந்திருப்பது, முழுமையின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஐரோப்பா கண்டத்தின் மேற்குத் தலைநகரமாக விளங்கும் இந்நகரம், உரையாடலுக்கான பரந்த பாதைகளைத் திறக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நம்மிடம் பேசுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரே மொழியைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற கண்டங்களின் நாடுகளுடன் போர்த்துக்கல் ஏற்கனவே இதைச் செய்து வருகிறது. உலக இளையோர் தினம், பழைய கண்டமாக விளங்கும் இந்த ஐரோப்பாவிற்கு உலகளாவிய வெளிப்படைத்தன்மைக்கான தூண்டுதலாக அமையலாம் என்பது எனது நம்பிக்கை.
உறவுப் பாலமாக ஐரோப்பா
ஐரோப்பா, அதன் கிழக்குப் பகுதியிலும், மத்தியதரைக் கடலிலும், ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் ஒரு உறவுப் பாலமாக அமைதியை ஏற்படுத்தக் கூடியவிதத்தில் உலகிற்கு அதன் உண்மையான பங்களிப்புத் தேவைப்படுகிறது. இதன் வழியாக, கடந்த நூற்றாண்டில், உலகப் போர்களுக்குப் பின், நல்லிணக்கத்தை அடைவதற்கும், பழைய பகையை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பதற்கும் உலக அரங்கில் ஐரோப்பா தனக்கே உரிய பங்களிப்பை வழங்கிட முடியும்.
வரலாற்றின் பெருங்கடலில் புயல்களுக்கு (சவால்களுக்கு) மத்தியில் பயணம் செய்யும் நாம், வலிமையான அமைதியின் அவசியத்தை உணர்கின்றோம். ஆகவே, ஐரோப்பாவின் மீது ஆழ்ந்த அன்புடனும், இந்தக் கண்டத்தை வேறுபடுத்தும் உரையாடலின் உணர்விலும், நாம் அதனைப் பார்த்து, "உலகின் அமைதிக்கான பாதைகளை, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை நீ காட்டவில்லை என்றால், இவ்வளவு இரத்தம் சிந்தும் பல்வேறு மோதல்களுக்கு மத்தியில் நீ எங்கே பயணம் செய்கிறாய் என்று கேட்கலாம்.
மேற்கு நாடுகளின் இதயமாக விளங்கும் ஐரோப்பா, மோதல்களைத் தீர்ப்பதற்கும் நம்பிக்கையின் விளக்குகளை ஏற்றுவதற்கும் அதன் மகத்தான திறமைகளைப் பயன்படுத்தவும், அதன் உடனடித் தேவைகளுக்கு அப்பாற்பட்டு கருத்தியல்கள் மற்றும் கருத்தியல் காலனித்துவ வடிவங்களைத் துரத்தாமல், மக்கள் மற்றும் நபர்களை உள்ளடக்கிச் செயல்படக் கூடிய ஒரு ஐரோப்பாவை நான் கனவு காண்கின்றேன்.
ஒன்றிணைந்து செயல்படவுதவும் 3 காரியங்கள்
கடலால் சூழப்பட்ட லிஸ்பன், நம்பிக்கைக்கான காரணத்தை நமக்குத் தருகிறது. இந்த விருந்தோம்பல் நகரத்தில் கடல்போல் இளையோர் வந்து குவிந்துள்ள வேளை, மிகவும் சவாலான ஒரு நிகழ்வை நடத்துவதில் போர்த்துக்கல் காட்டியுள்ள கடின உழைப்பு மற்றும் தாராள முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, படைப்பாற்றலுடன் ஒன்றிணைந்து புதியதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப தீர்மானிப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உதவும் நம்பிக்கையின் மூன்று காரியங்களான சுற்றுச்சூழல், எதிர்காலம், உடன்பிறந்த உறவு ஆகியவற்றை நான் உங்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
சுற்றுச்சூழல்.
போர்த்துக்கல் நாடு ஐரோப்பாவுடன் இணைந்து, படைப்பினைப் பாதுகாப்பதில் தனது சிறந்த பங்களிப்பைச் வழங்கியுள்ளது. ஆயினும்கூட, உலகளவில், இப்பிரச்சனை மிகவும் தீவிரமானதாகவே உள்ளது. கடல்கள் வெப்பமடைந்து வருகின்றன, அவற்றின் தாக்கம் நமது பொதுவான இல்லத்தை மாசுபடுத்தியுள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
நாம் வாழும் இவ்வில்லத்தை பிளாஸ்டிக் குப்பை கொட்டும் இடங்களாக மாற்றி வருகிறோம். மனித வாழ்க்கை என்பது நம்மைவிட மேலான சூழலின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்பதை கடல் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்தப் பூமி இல்லத்தை மிகுந்த அக்கறையுடன் நாம் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவும் நலமான இடங்களை இளையோருக்குக் கொடுக்காவிட்டால், அவர்களை நம்புவதாக நாம் எப்படிக் கூற முடியும்?
எதிர்காலம்
எதிர்காலம் என்பது, இரண்டாவது காரியமாகும். இளையோர்தான் நமது எதிர்காலம். வேலைவாய்ப்பின்மை, இயந்திரத்தனமான வாழ்க்கை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இல்லங்களை கட்டியெழுப்புவதில் சிரமம் மற்றும் சவால் நிறைந்த சூழலில் குடும்பங்களை உருவாக்கி குழந்தைகளை உலகிற்கு கொண்டு வருவதில் அச்சம் என, மனச்சோர்வடையச் செய்யும் பலவற்றை இன்னும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
ஆகவே, ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழல் இந்தக் காரியத்தில் நிறைய சாதிக்கவும் நம்பிக்கையை உண்டாக்கவும் முடியும். ஆனால், இது அதிகாரத்தைக் கைபற்றுவது பற்றியது அல்ல, ஆனால் மக்களுக்கு நம்பிக்கையைத் தருவது. முன்னெப்போதையும் விட இன்று, செல்வத்தை உற்பத்தி செய்யும் சந்தைப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், அதை அனைவருக்கும் சமமாக விநியோகிக்கவும் தவறியுள்ளதால், மக்களின் வளங்களையும் பாதுகாப்பையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிறர் மீதான அக்கறையை உருவாக்கிக்கொள்பவர்களாகத் திகழ்ந்திட அரசியல் வாழ்க்கை நமக்கு சவால் விடுக்கிறது. எதிர்காலத்திலும், குடும்பங்களிலும், குழந்தைகளிலும் அக்கறைக் காட்டுவதன் வழியாகவும், கடந்த காலத்தை விட்டுவிடாமல், இளையோருக்கும் முதியவர்களுக்கும் இடையே பிணைப்பை உருவாக்கும் தலைமுறைகளுக்கு இடையேயான உடன்படிக்கைகளை ஊக்குவிப்பதன் வழியாகவும் தொலைநோக்குப் பார்வையைக் காட்ட இச்சவால் நமக்கு அழைக்கப்படுகிறது.
உடன்பிறந்த உறவு
கிறிஸ்தவகர்களாகிய நாம் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொண்ட உடன்பிறந்த உறவு என்பது, நம்பிக்கையின் மூன்றாவது காரியமாக அமைகின்றது. போர்த்துக்கல்லின் பல பகுதிகளில், நெருக்கம் மற்றும் ஒற்றுமையின் உயிரோட்டமான உணர்வை நாம் எதிர்கொள்கிறோம்.
ஆயினும்கூட, உலகமயமாக்கலின் பரந்த சூழலில் இது நம்மை நெருக்கமாகக் கொண்டுவந்த போதிலும், உடன்பிறந்த உறவிற்கான நெருக்கத்தை நம்மில் உருவாக்கத் தவறிவிட்டது. எனவே, சமூக உணர்வை வளர்த்துக் கொள்ள சவால் விடும் இந்த உடன்பிறந்த உறவானது, நம்மோடு நெருங்கி வாழ்பவர்கள்மீது நாம் கொண்டுள்ள அக்கறையுடன் தொடங்குகிறது.
நாம் அனைவரும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்பதை உணர்ந்து, நமது முரண்பாடுகளையும் மாறுபட்ட கண்ணோட்டங்களையும் விட்டுவிட்டு, பொதுவான நன்மையைத் தொடர்வது எவ்வளவு அழகாக இருக்கிறது!
பல்வேறு கருத்துக்கள் மற்றும் மதங்களின் பெயரால் எழுப்பப்பட்ட பிரிவினைச் சுவர்களைத் தகர்க்கத் தூண்டும் அமைதிக்கான வேண்டுகோள்களாலும், வாழ்வின் தாகத்தாலும் நம்மைத் தூண்டும் இளையோரை இங்கேயும் நாம் காணலாம். இவ்விளையோருக்கும், மற்றவர்கள் மீது அக்கறை காட்டும் போர்த்துகீசிய சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும், அவ்வாறே அமைதியாகவும், தடையின்றியும் பல நன்மைகளை ஆற்றிவரும் உள்ளூர் தலத்திருஅவைக்கும் நான் நன்றி தெரிவிக்கவும் ஊக்கப்படுத்தவும் விரும்புகிறேன்.
நாம் வாழும் உலகிற்கும், இந்த அற்புதமான நாட்டிற்கும் நம்பிக்கையை அளிக்க, ஒரே சகோதரர் சகோதரிகளாக நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். கடவுள் போர்த்துக்கல் நாட்டை ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்