நம் அருகில் இருக்கும் உயிருள்ள கடவுள் இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசு ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த நபர், நியாயமானவர், இணக்கமானவர், துணிவுள்ளவர், வரலாற்றின் நாயகன், இறைவாக்கினர் என்பது மட்டுமன்றி எல்லாவற்றிற்கும் மேலாக நம் வாழ்க்கைப் பயணத்தில் நம் அருகில் இருக்கும் உயிருள்ள கடவுள் இயேசு என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமை பொதுக்காலத்தின் 21ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான மத்தேயு நற்செய்தி 16ஆம் அதிகாரம் 13 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகளான இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை குறித்து மூவேளை செபஉரையின் போது தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து கடந்த காலத்தின் நினைவு அல்ல, மாறாக நிகழ்காலத்தின் கடவுள் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு உயிருடன் இருக்கிறார், நம்முடன் இருக்கிறார், அவர் நம் பக்கத்தில் இருக்கிறார், அவருடைய வார்த்தையையும் அவருடைய அருளையும் நமக்குத் தருகிறார், அது நம்மை ஒளிரச் செய்து, மீட்டெடுக்கிறது என்றும் கூறினார்.
வாழ்க்கைப் பாதையில் நாம் தனியாக இல்லை, கடவுளின் உயிருள்ள மகனாம் கிறிஸ்து நம்முடன் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணம் கடினமாகவும், உயரமாகவும், மிகவும் செங்குத்தாகவும் தோன்றும் போது நாம் சோர்வடைய வேண்டாம் என்றும், நம் பலவீனங்களை ஏற்று, முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டு, நமது தோள்களில் உறுதியான மற்றும் மென்மையான அவரது கரத்தை வைத்து இயேசு நம்முடன் நடக்கின்றார் என்றும் கூறினார்.
இயேசு நம் அருகில் இருப்பதால் நமது அவரது துணையுடன் நமது நம்பிக்கையைப் புதுப்பிப்போம் என்றும், இயேசு உண்மையில் என் வாழ்க்கையில் உயிருடன் இருக்கிறாரா? இக்கட்டான சமயங்களில் நான் அவரைச் சார்ந்திருக்கிறேனா? அவருடைய இருப்பை வளர்த்துக் கொள்கிறேனா? நாம் வாழும் சமூகத்தில் என் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து அவரால் வழிநடத்தப்படுவதை நான் அனுமதிக்கிறேனா? என்பன போன்ற கேள்விகளால் நமது வாழ்வை சரிசெய்து கொள்ளவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்