தேடுதல்

இறைபுகழ்ச்சியும் பிறரன்புப் பணியும் அன்னை மரியாவின் வழிகள்!

விண்ணேற்படைந்த மரியாவே! செபம் மற்றும் சேவை வழியாக நாங்கள் ஒவ்வொரு நாளும் விண்ணகத்தை நோக்கி உயர எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபவுரையில்  அன்னை மரியாவின் வாழ்க்கை பிறரன்பு பணியாலும் இறைபுகழ்ச்சியாலும் நிறைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவின் இவ்விண்ணேற்றப் பெருவிழாவில், நமக்கு அடுத்திருப்போருக்கு உதவ வேண்டும் மற்றும், இறைவனுக்குப் புகழ்ப்பாட  வேண்டும் என்பதையே இறைவனின் வார்த்தை நமக்கு வெளிப்படுத்துகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அன்னை மரியாவின் வாழ்க்கை அவரது மகன் இயேசுவின் வாழ்க்கையை நமக்குப் பிரதிபலிக்கிறது என்பதையும் இருவரின் விண்ணகப் பயணமும் நாம் பிறருக்குப் பணியாற்றவேண்டும் என்பதையே காட்டுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

பிறரன்பு பணிகள்

பிரன்புப் பணிகளைக் குறித்து முதலில் நினைவு கூர்ந்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சகோதரர் சகோதரிகளுக்குப் பணியாற்ற நம்மையே நாம் தாழ்த்திக்கொள்ளும்போதுதான் நாம் உயர்வடைகின்றோம் என்றும், நமது வாழ்க்கையை உயர்த்துவது அன்புதான் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாம் பிறருக்கு மனத்தாழ்மையுடன் பணிபுரிவது அவ்வளவு எளிதல்ல என்றும், எலிசபெத்திற்கு உதவிபுரிய நீண்ட தூரம் பயணித்த மரியாவைப் போலவே, நாமும் மற்றவர்களுக்குப் பணியாற்றுவதில் சோர்வு, பொறுமை, கவலைகள் ஆகியவை ஆகியவற்றைக் காண்கின்றோம் என்றும் விளக்கிய திருத்தந்தை, இது ஒரு சோர்வு நிறைந்த பயணமாக இருந்தாலும், அதுவே விண்ணகத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வழியாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.

இறைபுகழ்ச்சி

நமது பணிகளில் இறைப்புகழ்ச்சி இல்லையெனில் அப்பணி மலடாகிவிடும் என்று எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு மரியா சோர்வைப் பற்றி சிந்திக்காமல் இறைவனுக்கு இதயத்திலிருந்து மகிழ்ச்சிப் பாடல் இசைத்தார், ஏனென்றால் இறைவனை அன்புகூர்பவர்கள், இறைப்புகழ்ச்சியைக் குறித்தும் அறிவார்கள் என்றும் கூறினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று என்ற இறைவார்த்தையை நினைவுகூர்ந்த திருத்தந்தை,  இறைபுகழ்ச்சி என்பது நற்செய்தியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைகின்றது என்றும், இது ஒரு ஏணி போன்று இதயங்களை விண்ணகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது என்றும் அவர் கூறினார்.

நமக்கான கேள்விகள்

என் வாழ்வில் சேவை ஊற்றெடுக்கிறதா? … நான், மரியாவைப் போல கடவுளில் அகமகிழ்கிறேனா?… மேலும், எனது இறைபுகழ்ச்சிக்குப் பிறகு, நான் சந்திக்கும் மக்களிடையே அவருடைய மகிழ்ச்சியைப் பரப்புகிறேனா? என்று தங்களுக்குத் தாங்களே கேள்வு எழுப்பிச் சிந்திக்குமாறு திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஆகஸ்ட் 2023, 13:50