கடந்த ஆண்டு ரிமினியில் நடைபெற்ற கூட்டம்  கடந்த ஆண்டு ரிமினியில் நடைபெற்ற கூட்டம்  

உண்மையான நண்பர்கள் கடவுளன்பின் பிரசன்னம்

நண்பர்கள் நம் உள்ளத்தைத் திறக்கவும், புரிந்துகொள்ளவும், மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளவும், ஆறுதல் அளிக்கவும், தனிமையிலிருந்து வெளியேறவும், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உண்மையுள்ள நண்பர்கள் இறையன்பின் பிரதிபலிப்பு, ஆறுதல் மற்றும் அன்பான பிரசன்னம் என்றும், கடவுளின் முன்முயற்சியால் இயேசு மனிதராகப் பிறந்து மனித உடன்பிறந்த உணர்வை அதன் பாதையை நமக்குக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை முதல் 25 வெள்ளிக்கிழமை வரை இத்தாலியின் ரிமினி மறைமாவட்டத்தில் "மனித இருப்பு ஒரு வற்றாத நட்பு" என்ற தலைப்பில் நடைபெற உள்ள 44ஆவது, மக்களுக்கிடையிலான நட்புறவு கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

தன்னை ஒரு நண்பராக வெளிப்படுத்திய இயேசு, இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நான் நண்பர்கள் என்றேன் என்று கூறியது போல உயிர்த்த கிறிஸ்துவின் ஆவி தனிமையை உடைத்து மனிதனுக்கு அவரது நட்பை தூய அருளாக அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தியானது ரிமினி மறைமாவட்ட ஆயர் நிகோலோ அன்செல்மி அவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மனித அனுபவம் என்பது ஒரு விழிப்புணர்வு மற்றும் ஆற்றல்மிக்க திறன் என்று அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதனின் பலம் மற்றும் இருப்பு என்பது ஓர் ஆழமான உரையாடல் என்றும், தனிமை என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வின் வேர்களிலும் அகற்றப்பட வேண்டியது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"உண்மையுள்ள நண்பர்கள் இறையன்பின் பிரதிபலிப்பு, அவரது ஆறுதல் மற்றும் அன்பான பிரசன்னம் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பர்கள் நம் உள்ளத்தைத் திறக்கவும், புரிந்துகொள்ளவும், மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளவும், ஆறுதல் அளிக்கவும், தனிமையிலிருந்து வெளியேறவும், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு கிறிஸ்தவர்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோர் கடவுளிடம் எழுப்பும் கூக்குரலுக்கு முன் காதுகேளாதோராக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனிநபர் மற்றும் மக்களுக்கு இடையிலான நட்புக்கான இடமாகவும், சந்திப்பு மற்றும் உரையாடலுக்கான பாதைகளைத் திறக்கும் இடமாகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இக்கூட்டமைப்பின் செயல்களைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "மற்ற கலாச்சாரங்கள் நமக்கு பகைவர்கள் அல்ல மாறாக, மனித வாழ்வின் வற்றாத செல்வத்தின் வெவ்வேறு பிரதிபலிப்புகள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2023, 12:41