Laudato si' திருமடலின் பிற்சேர்க்கை வெளியிடப்படவுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இறைவா உமக்கே புகழ் என்ற பெயர் கொண்ட Laudato si' திருமடலின் தொடர்ச்சியை இன்றைய காலநிலை மாற்ற நெருக்கடிகளுடன் தொடர்புபடுத்தி திருத்தந்தை எழுதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Laudato si' திருமடலின் இரண்டாவது பகுதியை, அதாவது அதன் தொடர்ச்சியை தான் எழுதிவருவதாக, ஆகஸ்ட் 21, திங்களன்று ஐரோப்பிய வழக்குரைஞர்கள் குழுவை திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது பற்றி விளக்கமளித்த திருப்பீடச்செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி அவர்கள், திருத்தந்தையின் இந்த புதிய பகுதி, இன்றைய காலநிலை நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என எடுத்துரைத்தார்.
ஐந்து கண்டங்களின் மக்களை பாதித்துவரும் அண்மைக்கால தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள், பெரும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை மையப்படுத்தி திருத்தந்தை பதிந்துவரும் கருத்துக்களை உள்ளடக்கியதாக Laudato si' ஏட்டின் புதிய பதிப்பு இருக்கும் என உரைத்தார் புரூனி.
நம் பொது இல்லமாகிய படைப்பை பாதுகாக்க சுற்றுச்சூழலை மதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் Laudato si' ஏடு திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபின் வெளியிட்ட இரண்டாவது ஏடாகும்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி எழுதி முடித்து கையெழுத்திட்டு, அதே ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி இவ்வேட்டை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதற்கு முன்னர் திருஅவையின் தலைமைப் பொறுப்பையேற்ற 2013ஆம் ஆண்டிலேயே, ஜூன் மாதம் 29ஆம் தேதி Lumen fidei என்ற ஏட்டை வெளியிட்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் படைப்பின் பாடல் என்பதில், இறைவா உமக்கே புகழ் என அவர் எழுதியுள்ள Laudato si’ என்ற வரிகளை தன் தலைப்பாகக் கொண்டதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், நம் பொது இல்லமாகிய இவ்வுலகை காப்பாற்றும் கடமையை வலியுறுத்தும் Laudato si' ஏடு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி, அதாவது திருத்தந்தையின் அண்மை கருத்துக்களை உள்ளடக்கிய புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்