தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அரசுத்தலைவர் Katalin Novák திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அரசுத்தலைவர் Katalin Novák  

திருத்தந்தையுடன் ஹங்கேரிய அரசுத்தலைவர் சந்திப்பு

உக்ரைனில் சிறுபான்மையினராக ஹங்கேரியர்கள் வாழும் Transcarpazia விலிருந்து வந்த திருஉருவப்படத்தை திருத்தந்தைக்கு வழங்கினார் ஹங்கேரி அரசுத்தலைவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஹங்கேரி குடியரசின் அரசுத்தலைவர் Katalin Novák அவர்கள், ஆகஸ்ட் 25, வெள்ளிக்கிழமை காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார்.

ஹங்கேரி நாட்டில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28 முதல் 30 தேதிகளில் திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணம் குறித்த பசுமையான நினைவுகளை இரு தலைவர்களும் தங்கள் சந்திப்பின்போது பகிர்ந்துகொண்டதுடன், நினைவுப் பரிசுப் பொருட்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஏறக்குறைய 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, திருப்பலிக்கான திராட்சை இரசம் மற்றும் திருப்பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டி, உக்ரைனில் சிறுபான்மையினராக ஹங்கேரியர்கள் வாழும் Transcarpazia என்ற இடத்திலிருந்து வந்த திருஉருவப்படம், மற்றும் திருத்தந்தையின் இவ்வாண்டு திருப்பயணப் புகைப்படங்களின் தொகுப்பு நூல் ஆகியவைகளை திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார் அரசுத் தலைவர் Katalin Novák.

இவ்வாண்டிற்கான அமைதிச் செய்தியை உள்ளடக்கிய ஏடு,  திருத்தந்தையின் சில ஏடுகள் மற்றும், ‘அமைதியின் தூதுவர்களாக இருங்கள்’ என பொறிக்கப்பட்ட வெண்கல கலைவடிவம் ஆகியவைகளை ஹங்கேரி அரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின், நாடுகளுடனான உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் நேருதவிச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து உரையாடல் மேற்கொண்டார் ஹங்கேரி அரசுத் தலைவர் Katalin Novák.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2023, 14:38