Laudato si' ஏட்டின் இரண்டாம் பகுதி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நம் பொதுவான இல்லமாகிய இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நம் கடமைகளை வலியுறுத்தும் Laudato si' என்ற ஏட்டின் இரண்டாம் பகுதி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாளை மறுநாள் அதாவது, செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமையன்று படைப்பின் மீது அக்கறைக்கான உலக செபநாள் சிறப்பிக்கப்பட்டு அது அக்டோபர் 4ஆம் தேதி அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவன்று நிறைவடையவுள்ள நிலையில், அத்திருவிழா நாளில் தான் Laudato si' என்ற ஏட்டின் இரண்டாம் பகுதியை வெளியிடவுள்ளதாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி வத்திக்கானில் இடம்பெற்ற புதன் பொது மறைப்போதகத்தின்போது இவ்வறிவிப்பை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைப் படைத்தவரின் புனிதக் கொடையான இயற்கையை பாதுகாப்பதற்கான அர்ப்பணத்தில் நாம் அனைவரும் நம் கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளுடன் ஒன்றிணைவோம் என விண்ணப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அநீதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடன் நாம் இணைந்து நிற்பதுடன், நம் பொது இல்லமாகிய படைப்பிற்கு எதிரான அறிவற்ற போரை முடிவுக்குக் கொணரவும் உழைப்போம் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato si' ஏட்டின் இரண்டாம் பகுதி அக்டோபர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்