நல்ல மேய்ப்பனாகத் திகழ்ந்தவர் அருள்பணியாளர் பினோ
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அன்பில் எல்லா வழிகளிலும் சென்றவர் என்றும், சாந்தகுணம், அடக்கம், அமைதி ஆகிய நல்ல மேய்ப்பனுக்குரியப் பண்புகளைக் கொண்டிருந்தவர் அருள்பணியாளர் பினோ என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை பலேர்மோவின் பெருநகர உயர் மறைமாவட்டப் பேராயர் Corrado LOREFICE அவர்களுக்கு மறைந்த அருள்பணியாளர் Pino Puglisi அவர்களின் முப்பதாம் ஆண்டு நிறைவையொட்டி அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் அழகு மற்றும் அதன் வேறுபாட்டை வெளிக்கொணரவும், நற்செயல்களைச் செய்யவும், கடவுளின் மென்மை, நீதி மற்றும் இரக்கத்தைக் காட்டவும் சரியான மொழிகளைக் கண்டறிய கேட்டுக்கொண்டுள்ளார்.
1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மறைந்த அருள்பணியாளர் Pino Puglisi நல்ல அருள்பணியாளர், இரக்கமுள்ள தந்தையின் சான்று, அமைதியை ஏற்படுத்துபவர் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, வறண்ட மற்றும் கடினமான பகுதியில் அன்பையும் மன்னிப்பையும் அறிவிப்பவராக அருள்பணியாளர் பினோ திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன் உடன் வாழும் ஒவ்வொருவரையும் நன்கு அறிந்தவர், சிறார் மற்றும் இளையோருக்கு வாழ்க்கையை அன்பு செய்யக் கற்பித்தவர், சுதந்திரமான மனதுடன் செயல்பட கற்பித்தவர், குடும்பங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியவர், அர்ப்பண உணர்வுடன் செயல்பட்டவர், நற்செய்தியை எளிமையாக அறிவித்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிகழ்காலத்தின் நடக்கும் மனித மற்றும் சமூக காயங்களுக்கு ஆறுதல் மற்றும் இரக்கத்தின் எண்ணெய் கொண்டு மருந்திட்டுக் குணப்படுத்த வேண்டும் என்றும், ஏழைகளுக்கான முன்னுரிமை மிகவும் அவசரமானது, அவை நம்மைக் கேள்வி கேட்கும் இறைவாக்கை நோக்கி வழிநடத்துபவை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
புதுப்பிக்கப்பட்ட மேய்ப்புப்பணி பராமரிப்பைத் தொடங்க ஒருங்கிணைந்த பயணம் பகுத்தறிவுக்கு சவால் விடுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்தால், நாம் அனைவரும் இணைந்து நிறைய செயல்களைச் செய்ய முடியும் என்ற அருள்பணியாளரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.
பலவிதமான அச்சங்களையும், தனிப்பட்ட எதிர்ப்புகளையும் களைந்து, நீதியும் மனித உடன் பிறந்த உணர்வையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட மறைந்த அருள்பணியாளர் பினோவின் வாழ்வு ஓர் அழைப்பாக அமையட்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நல்ல மேய்ப்பனின் உண்மையான உருவமாக, பயமின்றி துணிவுடன் சந்திக்கும் மனிதர்களிடத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்றும், பலவீனமானவர்கள், நோயாளிகள், துன்பப்படுபவர்கள், புலம்பெயர்ந்தோர், உதவி தேவைப்படுபவர்கள் ஆகியோருக்கு உதவுவதில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இளையோர் எதிர்காலத்தின் நம்பிக்கை என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர் பினோ அவர்களின் புன்னகை, மகிழ்ச்சி மற்றும் துணிவின் சீடர்களாக இருக்க ஊக்குவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்