தேடுதல்

மங்கோலியாவின் Ulaanbaatar-விலுள்ள புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயம் மங்கோலியாவின் Ulaanbaatar-விலுள்ள புனிதர்கள் பேதுரு, பவுல் பேராலயம்  

உலகளாவியத் திருஅவை அனைவருக்குமானது!

போர்ச்சுக்கல் நாட்டில் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்து உரோமைத் திரும்பிய ஒரு மாதத்திலேயே தற்போது மங்கோலியாவிற்குச் செல்கிறார் திருத்தந்தை : அந்திரேயா தொர்னியெல்லி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மங்கோலியாவுக்குத் தனது 43-வது  திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் வேளை, திருஅவை அனைவருக்குமானது, அதற்கு முன்னுரிமை எண்கள் அல்ல, என்று கூறிய திருத்தந்தையின் கருத்தை நினைவு கூர்ந்துள்ளார் திருப்பீடத் தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், அந்திரேயா தொர்னியெல்லி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலியாவிற்குப் புறப்படவிருக்கிறார் என்றும், அவர் ஆவலுடன் இந்த திருத்தூதப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்றும் கூறியுள்ள தொர்னியெல்லி அவர்கள், மங்கோலியாவில் 1990-களின் முற்பகுதியில் மறைப்பணியாளர்கள், ஒரு கிறிஸ்தவ சமூகத்தைப் புத்துயிர் பெறச் செய்த நிலையில், அங்குச் செல்லவேண்டுமென ஆவல்கொண்ட திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் நிறைவேறாத கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆசியாவின் இதயத்தில் புனித பேதுருவின் வாரிசான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அரவணைப்பைப் பெறும் மங்கோலியத் தலத்திருஅவை எண்ணிக்கையில் சிறியது என்றாலும், இறைநம்பிக்கையை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதிலும் பிறரன்பு பணிகள் ஆற்றுவதிலும் பெரியது என்று குறிப்பிட்டுள்ள  தொர்னியெல்லி அவர்கள், அந்நாட்டிலுள்ள 1,500 கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, அவர்களின் சிறந்த புத்த பாரம்பரியம் கொண்ட அனைத்து உன்னத மற்றும் ஞானமுள்ள மங்கோலிய மக்களையும் திருத்தந்தை சந்திக்கவிருக்கிறார் என்றும் உரைத்துள்ளார்.

திருஅவை என்பது அனைவருக்குமானது என்றும்,  எண்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிலையில், எந்த மொழி, கலாச்சாரம், மக்கள் அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் ஓர் இடம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள தொர்னியெல்லி, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவந்த ஒரு மாதத்திலேயே தற்போது மங்கோலியாவிற்குச் செல்கிறார் திருத்தந்தை என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2023, 14:18