வழக்கறிஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் வழக்கறிஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

அடிப்படை வேர்களுக்கு உண்மையுள்ளவர்களாக..

மனித மாண்பின் அடித்தளம் அதன் உன்னதமான தோற்றத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனித உரிமை, மரியாதை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் உறுதியான தன்மையைக் காண மக்கள் தங்கள் அடிப்படை வேர்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும், உண்மையான சுதந்திரத்துடன் முழுமனிதனாக சமூகத்தின் உயிர்நாடியை உருவாக்கவும் அழைக்கப்படுகின்றார்கள் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 21 திங்கள் கிழமை நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு ஆதரவாக வியன்னா அறிக்கையில் கையெழுத்திட்ட ஐரோப்பிய அவை நாடுகளின் வழக்கறிஞர்கள் குழுவை வத்திக்கானில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்த்தமற்ற போரின் காரணமாக பாதிக்கப்படும் உக்ரைன் போன்ற பகுதிகளில், நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், சுதந்திரம் மற்றும் மனித மாண்பிற்கு மரியாதை செய்வதற்கும் வழக்கறிஞர்கள் செய்யும் முக்கிய பங்களிப்பிற்குத் தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அழகான மற்றும் வாழக்கூடிய உலகத்தைப் பெறுவதற்கு இளம் தலைமுறையினருக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் தாராளமான கரங்களிலிருந்து நாம் பெற்ற படைப்பினை பாதுகாப்பதற்கான கடமைகளை கருத்தில் கொண்டு செயல்படவும் வலியுறுத்தினார்.

தற்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வை மையப்படுத்தி Laudato Sì இன் இரண்டாம் பகுதியை எழுதிக்கொண்டிருப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அமைதி, சமூகங்களில் நல்லிணக்கம் ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான, உண்மை மற்றும் நீதிக்கான சேவையை நோக்கிய விடாமுயற்சியுடன் செயல்பட வழக்கறிஞர்களுக்கு ஊக்கமூட்டினார்.

மனித மாண்பின் அடித்தளம் அதன் உன்னதமான தோற்றத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும்,  இதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் தடுக்கப்பட்டு, ஒவ்வொரு மனித செயல்பாட்டிலும், மனிதர் முன்னிலையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மக்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப்படுத்தவும், சுமைகளை இறக்கிவைக்கவும் நம்பிக்கையின் இடங்களாகத் திகழும் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் சமூகங்களில் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளரிடம் மக்கள் தங்கள் உள்ளத்தின் இரகசியங்களை எடுத்துரைப்பது போல வழக்கறிஞர்களிடம் மக்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்றும், இதனை நன்கு உணர்ந்து பிரச்சனைகளிலிருந்து வெளிவர மக்களுக்கு முழுமனதுடன் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2023, 14:38