தேடுதல்

அருள்பணியாளர்கள் புனிதர் பட்ட திருப்பலியின் போது அருள்பணியாளர்கள் புனிதர் பட்ட திருப்பலியின் போது  

மறைசாட்சிகள் கடவுளின் தோட்டத்தின் கனிகள்

மறைசாட்சிகள், தீமையை விட நன்மை வலிமையானது என்ற ஆழமான நம்பிக்கையை நம்மில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைசாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் திருஅவையின் வாழ்க்கையுடன் இணைந்து கடவுளின் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த கனியாக செழித்து வளர்கின்றனர் என்றும், முதல் நூற்றாண்டுகளை விட நாம் வாழும் காலத்தில் மறைசாட்சிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 5 புதன்கிழமையன்று புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் ஒரு பகுதியாக புதிய மறைசாட்சிகள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற ஒரு புதிய அவையை உருவாக்கியுள்ளதாக வெளியிடப்பட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டின் ஜூபிலியை முன்னிட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கும் அவருடைய நற்செய்திக்கு சான்றுபகர்வதற்கும் தங்கள் இரத்தத்தை  கொடுத்து மறைசாட்சிகளாக இறந்த அனைவரும் மறக்கப்படக்கூடாது எனவும், திருஅவையில் உள்ள மறைசாட்சிகள் அனைவரும் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையிலிருந்து உருவானவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கையின் சாட்சிகளான மறைசாட்சிகள் உண்மையான பிறரன்புப் பணிகளைச் செய்ய தூண்டுகிறார்கள் என்றும், தீமையை விட நன்மை வலிமையானது என்ற ஆழமான நம்பிக்கையை நம்மில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள் என்றும். குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவத்தையும் மரணத்தையும் கடவுளில் வென்ற கிறிஸ்துவை மறைசாட்சிகள் தங்கள் வாழ்வால் நமக்கு வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

2000 ஆம் ஆண்டு ஜூபிலியின் முதல் கால் நூற்றாண்டின் காலத்தில் விசுவாசத்தின் சாட்சிகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் தொடரவும் இந்த புதிய ஆணைக்குழு ஏற்கனவே தொடங்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடரும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைசாட்சிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவற ஆண்கள் மற்றும் பெண்கள், பொது நிலையினர், குடும்பங்கள், மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்பவர்கள் என தங்களின் வாழ்க்கையைத் தொண்டுப்பணிகளுக்காக அர்ப்பணித்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருத்தூது மடலான Tertio millennio adveniente இல் குறிப்பிடப்பட்ட "கடவுளின் மாபெரும் காரணத்திற்காக அறியப்படாத என்றும் இழக்கப்படாத வீரர்கள், மறைசாட்சிகள் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2000 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கொண்டாடப்பட்ட ஒன்றிப்பின் கொண்டாட்டத்தில் மறைசாட்சிகள் நினைவுகூரப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

மறைசாட்சிகளாக இறந்த நமது சகோதர சகோதரிகளின் வாழ்க்கை சாட்சியங்களை, அவர்கள் சிந்திய இரத்தத்தை, நினைவுகளைக் கிறிஸ்தவ சமூகம் பொக்கிஷமாக பாதுகாக்கும் வகையில் வரலாற்று ஆய்வைத் தொடர வேண்டியது அவசியம் என்றும், இது கத்தோலிக்க திருஅவைக்கு மட்டுமன்றி, அனைத்து கிறிஸ்தவ மதப்பிரிவினருக்குமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்கள் பல காணும் நம் காலத்திலும் கூட, கிறிஸ்தவர்கள் தம்மை ஒன்றிணைக்கும் திருமுழுக்கின் உயிர்சக்தியைப் பெறுதல், ஞாயிறு நற்கருணையில் பங்குபெறுதல், போன்றவற்றில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுதல், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுதல், அமைதி, மன்னிக்கும் சக்தி போன்றவற்றிற்காக கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சிகள் என்றும் கூறியுள்ளார்.​

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2023, 14:26