உடன்பிறந்த உணர்வு நிலை எனும் வெற்றிக்கோப்பையை பெறுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 1 முதல் 6 வரை போர்த்துக்கல்லின் லிஸ்பனில் இடம்பெற உள்ள உலக இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் அர்ஜெண்டினாவின் Córdoba பெருமறைமாவட்ட இளையோரை ஞாயிறன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவரையும் ஒதுக்காமல் மற்றவரை சந்திப்பதில் ஒவ்வோர் இளைஞரும் முதல் அடியை எடுத்துவைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஜுலை 16, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்கு முன்னர், அர்ஜெண்டினா நாட்டின் ஏறக்குறைய 40 பேர் கொண்ட இந்த இளையோர் குழுவை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த திருத்தந்தை, நாம் முன்னோக்கிச் சென்று மற்றவர்களை சந்தித்து, நம்முடையதைப் பகிரவும், அவர்கள் வழங்கவிருப்பதை ஏற்கவும் தயாராகும்போது, நாம் அனைவரும் வெற்றியாளர்களாவோம் எனக் கூறினார்.
ஒருவருக்கொருவர் ஏற்று நமக்குரியதை பகிர்ந்து வாழ தயாராகும்போது உடன்பிறந்த உணர்வு நிலை எனும் வெற்றிக்கோப்பையைப் பெறும் வெற்றியாளர்களாக மாறுவோம், ஏனெனில் இங்கு தோல்வியுறுவோர் எவருமில்லை என மேலும் அவ்விளையோரிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் காலடிகளைப் பின்பற்றி வெற்றிகண்ட கடந்தகால கிறிஸ்தவர்களை நாம் நினைவில் கொண்டு, நம் வாழ்க்கைப் பந்தயத்தை இறுதிவரை எவ்வித கவனச்சிதறலும் இல்லாமல் எடுத்துச் செல்லவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல்வேறு முகங்கள், கலாச்சாரங்கள், அனுபவங்கள், விசுவாசத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் என பன்முகத்தன்மையுடைய இந்த உலக இளையோர் தினம், நாமெல்லாம் ஒன்றிணைந்த சாட்சியாக விளங்க உதவட்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்