தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவதே உங்கள் விருப்பமாக இருக்கட்டும்!

கடவுள், நம்மை நிபந்தனையற்ற முறையில் அன்புகூர்கிறார், மேலும் நம் இதயங்கள் மற்றும் ஆசைகளின் ஆழத்தை அறிந்தவர் அவர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுள் உங்கள் ஒவ்வொருவரிடமும் அன்பின் திட்டத்தை வைத்திருக்கிறார். ஆகவே, அவருடய திருவுளம் குறித்து அச்சமடைய வேண்டாம். ஆனால் அவருடைய அருளில்  உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள் என்று Medjugorje இளையோரிடம் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Medjugorje-வில் நிகழும் அனைத்துலக இளையோர் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜூலை 27, இவ்வியாழனன்று அதன் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் விருப்பத்திற்கு அவர்களின் இதயங்களைத் திறக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Medjugorje திருவிழாவில் நிகழ்ந்த நற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு அருள்சாதனக் கொண்டாடட்டங்களில் அவர்கள் செலவழித்த நேரமானது, கடவுளின் விருப்பம் என்பது அச்சப்படவேண்டிய ஒன்றல்ல, மாறாக அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதைக் கண்டுகொள்ள உதவிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கடவுளின் திருவுளம் என்பது விலைமதிப்பற்ற ஒரு கொடை என்று கூறியுள்ள திருத்தந்தை, அதனால்தான் கன்னி மரியா இயேசுவைப் பெற்றெடுப்பதற்கு முன்பே அவருடன் இறைஉறவை ஏற்படுத்திக் கொண்டார் என்றும், அவரது வாழ்வில் பல துயரங்கள் குறுக்கிட்டபோதும் அவர் எவ்வாறு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றினார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். 

அன்னை மரியா வானதூதரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட தருணத்தில் அவர் தனது மகனின் சீடத்தியாகவும்  அன்னையாகவும் மாறினார் என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அவருடைய முழு வாழ்க்கையும் கடவுளின் திருவுளத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, கடினமான தருணங்களில் கடவுளின் திருவுளதைப் புரிந்து கொள்ள சில வேளைகளில் நாம் போராடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறைத்தந்தையின் விருப்பத்தை விட சிறந்த விருப்பம் வேறொன்றும் நமக்கில்லை என்றும், அவரது இறையாட்சியையும் நமது முழு மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு அவர் நம்மீது அன்பு செலுத்துவதே அவரின் திட்டமாகும் என்றும் விளக்கியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையில் சுயநலத்திற்கோ சோம்பலுக்கோ இடமில்லை, இறைவனுடன் சேர்ந்து உங்கள் இருத்தலுக்கான அடித்தளத்தை அமைக்க உங்கள் இளமையை பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் உங்கள் தனிப்பட்ட, தொழில் மற்றும் சமூக எதிர்காலம் இந்த ஆண்டுகளில் நீங்கள் செய்யும் தேர்வுகளைப் பொறுத்தே அமைத்துள்ளது என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

கடவுளின் அருளை உங்களில் செயல்பட அனுமதித்து, உங்கள் அன்றாட வாழ்வின் அர்ப்பணிப்பில் நீங்கள் தாராளமாகவும் விடாமுயற்சியுடனும் இருந்தால், நீங்கள் இந்த உலகத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றுவீர்கள் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார் திருத்தந்தை.

துன்பப்படுபவர்களுக்குக் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை நீங்கள் எடுத்துச் செல்வதன் வழியாகப் புதிய நற்செய்தி அறிவிப்பின் ஆர்வமுள்ள மறைபணியாளர்களாக இருப்பதற்கு உங்களை நான் ஊக்குவிக்கிறேன் என்று கூறி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2023, 13:54