பிரான்ஸ் நாட்டின் Marseille நகர் பிரான்ஸ் நாட்டின் Marseille நகர் 

மத்தியதரைக்கடல் பகுதி குறித்த கூட்டத்தில் திருத்தந்தை

கடலில் உயிரிழந்த குடியேற்றதாரர் மற்றும் மாலுமிகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இடத்தில் மதத்தலைவர்களுடன் செபிக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்தியதரைக்கடல் பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதித்து புரிந்துகொள்ளும் நோக்கத்திலான கூட்டம் பிரான்ஸ் நாட்டின் Marseille நகரில் செப்டம்பர் மாதம் 18 முதல் 24 வரை இடம்பெற உள்ளதை முன்னிட்டு அம்மாதத்தின் 23 மற்றும் 24 தேதிகளில் அந்நகரில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறக்குறைய 60 திருவை பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் MED23 என்ற இந்த கலந்துரையாடல் சந்திப்பையொட்டி செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி உரோம் நேரம் ஏறக்குறைய பிற்பகல் 2 மணி 30 நிமிடங்களுக்கு உரோம் நகரிலிருந்து கிளம்பும் திருத்தந்தை, Marseille நகரில் பிரான்ஸ் அரசுத்தலைவரால் வரவேற்கப்படுவதுடன், Notre Dame de la Garde பெருங்கோவிலில் மறைமாவட்ட அருள்பணியாளர்களுடன் மரியன்னை செபத்தைச் செபிப்பதுடன், மத்தியதரைக் கடலில் உயிரிழந்த குடியேற்றதாரர்கள் மற்றும் மாலுமிகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இடத்தில் மதத்தலைவர்களுடன் செபக்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்.

செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை, Marseille பேராயர் இல்லத்தில், பொருளாதாரச் சுமையால் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களைத் தனியாக சந்திக்கும் திருத்தந்தை, MED23 என்ற பெயரில் ஏழு நாட்களாக இடம்பெறும் மதத்தலைவர்களின் கூட்டத்தின் இறுதி நிகழ்விலும் கலந்து கொள்வார்.

ஒன்றரை மணி நேர இச்சந்திப்பிற்குப்பின் உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு பிரான்ஸ் அரசுத்தலைவரையும் சந்திக்கும் திருத்ந்தை, Vélodrome மைதானத்தில் பொதுமக்களுடன் திருப்பலியை நிறைவேற்றி அன்று மாலையே உரோம் நகர் திரும்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2023, 14:32