உரோமையில் ஆலயங்கள் தாக்கப்பட்டதன் 30-ஆம் ஆண்டு நினைவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
முன்னெப்போதையும் விட இன்று, தங்கள் கடமையை நிறைவேற்றுவதில், சில வேளைகளில் உயிரைப் பணயம் வைத்து, சமூகத்தின் பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை நன்றியுடன் நினைவுகூருவது அனைவரின் கடமையாகும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமை உயர்மறைமாவட்டத்தின் VELABRO-விலுள்ள புனித ஜார்ஜியோ ஆலயமும், புனித ஜான் இலாத்தரன் பேராலயமும் தாக்கப்பட்டதன் 30-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் துணை ஆயர் Baldassare Reina அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, இணைந்து நடத்தும் அவர்களின் இறைவேண்டலில் தானும் அவர்களுடன் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மக்களாட்சியின் அடிப்படை விழுமியங்களான நீதி மற்றும் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களைப் பாதுகாத்தவர்களின் தியாகம், அன்பின் புதிய நாகரீகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்கும் வகையில் நமது மனசாட்சிக்கான வலுவான அழைப்பாக மாறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்
இத்தருணத்தில், அழகான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் இளையோர், அச்சம் தவிர்த்து வலிமையுடன் இருக்கவேண்டுமென அவர்களுக்குத் தான் வேண்டுகோள்விடுப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சம் மனதையும் இதயத்தையும் பிடிக்கும்போது அது ஆழமாக அவற்றில் வேரூன்றிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப் பணிகளைப் பொறுப்பேற்று செயல்படுத்துபவர்களும், நமது நகரத்தின் பல தலத்திருஅவையின் பொறுப்பாளர்களும், ஒரு புதிய மனித நேயத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தீவிரமாக செயல்படுவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
"‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத் 25:40) என்ற நமதாண்டவரின் படிப்பினையை உங்களுக்கு நினைவுபடுத்துவிதமாக, இளகிய மனதுடனும் பரிவிரக்கம் நிறைந்த உள்ளமுடனும் விளிம்புநிலையில் வாடும் மக்கள் அருகில் நிற்கத் தயங்காதீர்கள் என்றும் தனதுசெய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்