தேடுதல்

திருத்தந்தையின் ஆகஸ்ட் மாத செபக் கருத்து

கிறிஸ்தவர்களாகிய நமக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், நாம் நம்பகத்தன்மை அற்றவர்களாக மாறிவிடுவோம், யாரும் நம்மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள், நம் சொந்த வாழ்க்கையில் நற்செய்திக்குச் சாட்சியாகப் பயணம் செய்ய, இளைஞர்களாகிய நமக்கு உதவ வேண்டுமென இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை லிஸ்பனில் நிகழும் உலக இளையோர் தினக்  கொண்டாட்டங்களை மையப்படுத்தி ஆகஸ்ட் மாத செபக் கருத்து பற்றிய தன் சிந்தனைகளை, காணொளிச் செய்தி வழியாக, ஜூலை 27, இவ்வியாழனன்று  வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் நலன்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

இக்கால வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் முதியோரே அதிக அளைவில் பங்கேற்பதைக் காணும்போது, திருஅவை என்பது முதியோருக்கு மட்டுமேயுரிய அமைப்பாக தோன்றுகிறது எனத் தன் செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை என்பது இளையோருக்குரிய ஒரு சங்கமேயாகும், ஏனெனில், அது  வயது முதிர்ந்தோருக்கான சங்கமாக இருக்குமேயானால் அவர்களுக்கு ஏதாவது நிகழும்போது, அது இறந்துவிடும் என்று விளக்கியுள்ளார்.

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், “இளைஞர்களுடன் வாழ்ந்தால் நீங்களே இளமையாகிவிடுவீர்கள்” என்று கூறுவார் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்கு இளையோர் அதிக அளவில் தேவை, காரணம் அப்போதுதான் அது வயதாகாமல் என்றும் இளைமையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்' (காண்க லூக் 1:39) என்ற மையக்கருத்தை இவ்விளையோர் தினம் கொண்டுள்ளதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ள திருத்தந்தை, அன்னை மரியா, தான் கடவுளின் தாயாகப் போகிறேன் என்று தெரித்தவுடனேயே, அவர் செல்ஃபி எடுக்கவோ அல்லது அதனைப் பிறருக்குக் கூறி பெருமைப்படவோ அங்குத் தங்கியிருக்கவில்லை, மாறாக, எலிசபெத்திற்கு உதவிசெய்யவே இந்த அவசர பயணத்தை அவர் மேற்கொண்டார் என்பதை அறிந்து நாமும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒரு பயணத்தைக் தொடங்க அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் உரைத்துள்ளார்.

இந்த இளையோர் தினக் கொண்டாட்டங்கள் ஏன் லிஸ்பனில் நடைபெறுகின்றன என்பதற்கான காரணம் குறித்து இக்காணொளிக் காட்சியில் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிஸ்பனில், உலகின் எதிர்காலத்திற்கான ஒரு விதையை தான் காண விரும்புவதாகவும், அன்பை மையமாக வைத்து, நாம் அனைவரும் சகோதரர் சகோதரர்கள் என்பதை உணரக்கூடிய ஓர் உலகமாக அது அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் போர் நிகழும் உலகில்  வாழ்கின்றோம்;  நற்செய்திக்குச் சான்று பகர்வதற்கு அஞ்சாத மற்றும் மகிழ்ச்சியான ஓர் உலகம் நமக்கு வேண்டும். ஏனென்றால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், நாம் நம்பகத்தன்மை அற்றவர்களாக மாறிவிடுவோம், யாரும் நம்மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்றும் கூறி ஆகஸ்ட் மாதத்திற்கான் தனது செபக் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2023, 14:56