போர்த்துக்கலில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2017 மே 12) போர்த்துக்கலில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2017 மே 12) 

அமைதிக்காக செபிக்க பாத்திமா நகர் செல்லும் திருத்தந்தை

உக்ரைன் அமைதிக்காகவும் உலகில் மறக்கப்பட்ட, அதேவேளை, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவவும் செபிக்கச் செல்லும் திருத்தந்தை

அந்த்ரேயா தொர்னியெல்லி

(மொழிபெயர்ப்பு - கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்)

உக்ரைனிலும் உலகம் முழுவதிலும் அமைதி நிலவ செபிக்கும் நோக்கத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போர்த்துக்கல்லின் பாத்திமா நகர் திருத்தலத்திற்கு பயணம் செய்ய உள்ளதாக அறிவித்தார் திருப்பீட செய்திப் பிரிவு இயக்குனர் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி

ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் போர்த்துக்கல்லின் லிஸ்பன் நகரில் உலக இளையோர் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து ஒரே ஒரு நாள் பாத்திமா திருத்தலத்திற்குச் சென்று உலக அமைதிக்காக, குறிப்பாக உக்ரைன் நாட்டிற்காக செபிக்க உள்ளார்.

1917ஆம் ஆண்டு போர்த்துக்கல்லின் பாத்திமா நகரில் ஆடு மேய்க்கும் மூன்று சிறார்களுக்கு அன்னை மரியா காட்சி வழங்கிய இடத்தில் கட்டப்பட்டுள்ள திருத்தல கோவிலுக்கு இவ்வாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்று செபிக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித குலமனைத்தின் வருங்காலம் குறித்த செய்திகளை அன்னை மரியாவிடம் இருந்து 1917ல் பெற்ற மூன்று சிறார்களுள் இரண்டு பேர் ஏற்கனவே புனிதர்களாக திருஅவையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாமவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கான படிகள் துவக்கப்பட்டுள்ளன.

அன்னமரியா காட்சி வழங்கியதன் நூறாமாண்டு கொண்டாட்டங்களின்போது அருளாளர்கள்  Francisco மற்றும் Jacinta Martoவை புனிதர்களாக அறிவித்தத் திருப்பலியை நிறைவேற்ற 2017ஆம் ஆண்டு மே மாதம் பாத்திமா நகர் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தற்போது இரண்டாவது முறையாக அங்கு செல்ல உள்ளார்.

தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரண்டாவது முறையாக பாத்திமா திருத்தலத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து, போர்த்துக்கல் லிஸ்பன் நகர் திருப்பயணத்தில் அதனை இணைத்துக் கொண்டது, உக்ரைன் அமைதிக்காகவும் உலகில் மறக்கப்பட்ட அதேவேளை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும் எனவும்  அன்னைமரியாவிடம் செபிக்கவே எனத் தெரிவிக்கிறார் திருப்பீட செய்திப் பிரிவு இயக்குனர் தொர்னியெல்லி.

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் துவங்கி ஒரு மாதம் கடந்தவுடனேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் வைத்து இரஷ்யாவையும் உக்ரைனையும் அன்னைமரியாவின் மாசற்ற தூய திருஇதயத்திற்கு அர்ப்பணித்ததுடன் தொடர்புடையது ஆகஸ்ட் மாத பாத்திமா திருப்பயணம் என்கிறார் தொர்னியெல்லி.

இரஷ்யாவை அர்ப்பணித்து அபிஷேகம் செய்தல் என்பது அன்னை மரியாவின் பாத்திமா காட்சி செய்திகளோடு தொடர்புடையதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருப்பீட செய்தித்துறையின் செய்திப்பிரிவு இயக்குனர் தொர்னியெல்லி.

அமைதிக்கான பாதையை நாம் இழந்துள்ளோம், போரினால் பல இலட்சம் பேர் உயிரிழந்ததையும் அவர்களின் தியாகங்களையும் நாம் மறந்துவிட்டோம், பல நாடுகள் ஒன்றிணைந்து எடுத்த அமைதி அர்ப்பணத்தையும்  நாம் தூர எறிந்துவிட்டோம், மக்களின் கனவுகளையும் இளையோரின் நம்பிக்கைகளையும் வீணாக்கியுள்ளோம், இப்போது கடலின் விண்மீனே போர் எனும் புயலால் எம் வாழ்க்கைப்படகு சேதமடையாமல் இருக்க உதவு. போரிலிருந்து எம்மை மீட்டருளும், அணு ஆயுத அச்சுறுத்தலிலிருந்து எம்மைக் காத்தருளும் என பதினாறு மாதங்களுக்கு முன்னர் திருத்தந்தை செபித்ததையும் திருத்தந்தையின் பாத்திமா திருப்பயணம் குறித்த தன் செய்தியில் தொர்னியெல்லி எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2023, 13:52