Van Thuân அமைப்பை நிறுவியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருப்பீடத்தின் "நல்ல சமாரியர்" மற்றும் "நீதி மற்றும் அமைதி" அமைப்பை அகற்றிவிட்டு அதற்குப்பதிலாக Van Thuân என்ற புதிய அமைப்பை நிறுவியுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நல்ல சமாரியர் மற்றும் நீதி மற்றும் அமைதி அமைப்பை அகற்றுவதற்கும், அவற்றின் இடத்தில் Van Thuân அமைப்பை நிறுவுவதற்கும் அழைப்பு விடுத்து, திருஅவை சட்ட எண் 120, பத்தி 1இன் படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த மாற்றம் 2023 ஜூலை 25 இச்செவ்வாய் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Thuân அமைப்பு என்பது 2002-இல் இறந்த வியட்நாமிய கர்தினால் பெயரில் அழைக்கப்படுகிறது. 1998 முதல் அவர் இறக்கும் வரை கர்தினால் Van Thuân அவர்கள், நீதி மற்றும் அமைதிக்கான அப்போதைய திருப்பீடத் துறையின் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு கர்தினால் Van Thuân அவர்கள், 1975 முதல் 1988 வரை வியட்னாமில் 13 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். அவர் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
திருத்தந்தையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த ஆவணம், 2023, ஜூலை 3, திங்களன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அமைப்பின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னியிடம் வழங்கப்பட்டது.
மேலும், புதிய சட்டங்கள் வெளியிடப்படும்வரை, நல்ல சமாரியர் மற்றும் நீதி மற்றும் அமைதி அமைப்பில் எஞ்சியிருக்கும் அனைத்து பூர்வீகச் சொத்துக்களும் புதிதாக நிறுவப்பட்டுள்ள வான் துவான் அமைப்பிற்கு மாற்றப்படும் என்றும் திருத்தந்தை அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்