தேடுதல்

கிரேக்கத்தின் காட்டுத்தீ கிரேக்கத்தின் காட்டுத்தீ 

கிரேக்க, இத்தாலி பேரிடர்களுக்கு திருத்தந்தையின் தந்தி

நம் பொது இல்லமாகிய இவ்வுலகை காக்க வேண்டிய நம் அக்கறையையும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நம் கடமையையும் நாம் உணரவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலியிலும் கிரேக்கத்திலும் பெரும்புயலாலும் காட்டுத்தீயாலும் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஆன்மீக நெருக்கத்தையும் இறைவேண்டலையும் வெளியிட்டு அவ்விரு நாடுகளுக்கும் இரங்கல் தந்திகளை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கிரேக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Petros Stefànou அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியில், தென் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப காற்று வீசி பாதிப்புகளை ஏற்படுத்திவரும் வேளையில், மனித வாழ்வை அச்சுறுத்தும் காட்டுத்தீயால் கிரேக்கத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் திருத்தந்தை தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடும் அதேவேளை, இத்தகைய ஒரு சூழலில் தீவிரமாக சேவையாற்றிய தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் ஏனைய சுயவிருப்பப் பணியாளர்களை திருத்தந்தை பாராட்டுவதாகவும் கர்தினால் பரோலின் அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு சூப்பி அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இடியுடன் கூடிய புயல் மற்றும் காட்டுத்தீயால் இத்தாலியின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களோடு தன் ஆன்மீக நெருக்கத்தை தெரிவிப்பதோடு, காலநிலை மாற்றம் தரும் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும், நம் பொது இல்லமாகிய இவ்வுலகை காக்க வேண்டிய நம் அக்கறையையும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நம் கடமையையும் நாம் உணரவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாதிக்கப்பட்ட மக்களிடையேப் பணியாற்றுவோருக்கு பாராட்டுக்களை வெளியிட்டுள்ளதோடு, அனைவருக்கும் திருத்தந்தையின் செப உறுதியும் கர்தினால் பரோலின் வழி அனுப்பபட்டுள்ள தந்திச் செய்தியில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2023, 14:44